பெருங்கருணை

“இவய்ங்களுக்கு சொன்னப் புரிய மாட்டேங்குது. எதையாச்சும் கலந்துவிடுடா என குக் நினைச்சுற போறார்” என வேடிக்கைக்காக உடன் பணிபுரியும் அண்ணன் பேசிக் கொண்டிருந்தார். குக்குக்கு இடைவிடாத பணி இருந்துக்கொண்டே இருப்பதால் அவர் இப்படி செய்தால் என்ன ஆகுமென நாங்கள் சிரித்தவாறு பேசிக் கொண்டிருந்தோம்.

எனக்கு அப்போது தோன்றியது, அவர் அப்படி எதுவும் செய்யாமல் இருப்பது அவரின் கருணையால்தான். நாம் வெளியில் சாப்பிடுகிறோம். அத்தனை முறையும் குற்றமில்லாத உணவு கிடைப்பது யாரின் கருணையாலோதானே.

இப்பாடு பட முடியாது துரையே, இரங்கி அருள் செய் என வள்ளலார் இறைஞ்சும்போதும், அவனை ‘பெருங்கருணைக் கடலே’ என அழைக்கிறார். அவனின் இந்தக் கருணைக்கு எப்படி கைம்மாறு செய்வது என தளர்கிறார். 

இறைவனின் கருணை போலவே சக மனிதர்களின் கருணையும் மகத்தானது. ஆயுத போராளி ஒருவரின் நினைவுக்குறிப்பினை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர் மார்க்ஸை நன்றியுடன் நினைவுக்கூருகிறார். 

மார்க்ஸ் வாழ்ந்தபோது பத்திரிக்கைகளுக்குக் கட்டுரைகள் கொடுத்து அதில் சொற்ப பணம் ஈட்டியிருக்கிறார். குழந்தைகளைக் இழந்திருக்கிறார். நாடு விட்டு நாடு துரத்தப்பட்டிருக்கிறார். பிரிட்டனில் மிகச் சிறிய அரசு பணிக்காகக் காத்திருக்கிறார். ஆனால் அவரின் சித்தாந்த வலிமையால் உருவான அரசுகள் அதன் பிறகு ஒரு நூற்றாண்டுக்கு உலகையே மாற்றின. மார்க்ஸ் மீதான உலகின் கருணையைவிட உலகின் மீதான மார்க்ஸின் கருணை பெரிதாக இருந்தது.

உலகின் பெருமதங்கள் இறைவனை கருணை கொண்டவனாகச் சித்தரிக்கின்றன. இறைவனைப் போலவே இயற்கையும் கருணை கொண்டது.

இயற்கையின் கருணை என்று சொல்லும்போதே, இறாலின் வெள்ளுடலில் துருத்தித் தெரியும் கருப்புக் குடல்போல கருணை தவறும்போது நடப்பதும் நினைவுக்கு வருகிறது. திபெத்தில் நடந்த பேரழிவில் உயிரிழந்தவர்கள் மீதான கருணை யாராலோ திரும்பப் பெறப்பட்ட காரணம் என்னவென தெரியவில்லை.

அங்கிருந்து திரும்பிய அக்காவிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இறைவனின் கருணையைப் போற்றினார். நாம் நம்பி நிற்கிற நிலம் சரியும் என்பது எத்தனை அச்சமூட்டக்கூடியது. அங்கிருந்து நாம் பிழைத்துத் திரும்புவது நிச்சயம் கருணை அன்றி வேறு என்ன.

மழையின்போது மரங்கள் சடசடவென முறிகின்றன. நீர் வெள்ளமாக மாறினால் முதலில் நிற்பது என்வீட்டு வாசலில். மலையின் மீது ஏதோவொரு சத்தியத்தின்பொருட்டு நிற்கும் பாறை எப்போது வேண்டுமானாலும் விழலாம். இவை எல்லாமும் நமக்கு நடக்காமல் இருப்பது ஏதோவொரு கருணையால்தான்.

பேரூர் கோயிலில் அமர்ந்து ஒருநாள் மதுவுடன் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு எங்கெங்கோ சுற்றி, மெயின் கேரக்டராக நாம் எப்போதாவது நம்மை உணர்ந்திருக்கிறோமா என்று வந்தது. 

மெயின் கேரக்டருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். ட்ரெயினில் எதிரில் அமர்ந்திருப்பவள் காதலியாகலாம், ஓட்டு போட வந்தவர் சிஎம் ஆகலாம். அப்படி எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா என மது கேட்டாள். எனக்கு அப்படி பலமுறை நடந்திருக்கிறது.

சென்னையில் எந்தவித பகட்டுமில்லாத விசாலமான அறையில் மெத்தையின்மீது படுத்து விட்டத்தை பார்த்து அன்றைக்கான இரவுணவுக்கு என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போது, யாராவது அழைத்து கேசுவலாக பேசிவிட்டு காசு தேவைப்படுதாடா எனக் கேட்டால், ஆம், இல்லை என்று சொல்ல எதுவுமின்றி இருப்போம். அவர்கள் பணம் போட்டுவிட்டு உடம்பை பார்த்துக்கோ என அழைப்பை துண்டிப்பார்கள்.

மனநிலை மோசமாக இருக்கும் சூழலில் எங்கிருந்தோ அழைப்பு வரும். அப்போது, நம் வாழ்வு யாரின் திரைக்கதையோ எனத் தோன்றும். இவை எல்லாம் மிகைப்படுத்தலாக இருக்கலாம். ஆனால் இந்த தற்செயல்களின் மீதான ஈர்ப்பு எனக்குக் குறைந்ததில்லை.

மிகப் பெரும் இயந்திரங்களின் வருகைக்குப் பிறகு மனிதர்களின் வாழ்வு சிறியதாக மாறிவிட்டது. இயந்திரம் என்பது நம் கண்ணால் பார்க்கக் கூடியது. ஆனால் இத்தனை கோடி பேரின் வாழ்வை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத இயந்திரம் நிச்சயம் கருணையோடு கூடியதுதான். 

ஒருமுறை காரில் செல்லும்போது கண் இமைகள் இன்னும் திறந்திடாத நாய்க்குட்டியொன்று சாலையில் குறுக்கிட்டது. நான் காரை நிறுத்தி அந்த நாய்க்குட்டி திரும்ப சாலையில் குறுக்கிடாத தொலைவில் விட்டுவிட்டு பின்னர் சென்றேன். அன்றைக்கு பிறகு அந்த நாய்க்குட்டியை நான் பார்க்கவில்லை. பின்னர் ஒருமுறை செல்லும்போது அதன் கழுத்தில் காலர் கட்டப்பட்டு அது சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. யாரின் கருணையாலோ அது ஜீவித்திருக்கிறது.

கருணை மன்னிப்போடும் தொடர்புடையது. இஸ்லாமிய இறையியல் இறைவனை பெருங்கருணையாளன் என்கிறது. அவனின் கருணையாலேயே நாம் செய்யும் செயல்களின் விளைவுகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்கிறோம் என்கிறது. 

ஆற்றில், மலையில் எப்போதும் யாராவது குப்பைகளை எறிவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எங்கிருந்தோ வார விடுமுறைகளில் சிலர் கிளம்பி வந்து குவியும் குப்பைகளை அகற்றுகின்றனர். 

முகமே அறியாத குழந்தைகளின் கல்விக்காக லட்சங்களில் நன்கொடை அளிக்கின்றனர். போர்களைத் தடுக்கின்றனர். வெள்ளம் எனக் கேள்விப்பட்டவுடன் பிஸ்கட்டுகளை நிவாரணத்துக்காக கட்டத் தொடங்குகின்றனர்.

என்னால் நம்பிக்கையிழக்கவே முடியவில்லை. உலகம் கருணையோடுதான் இருக்கிறது. இல்லையேல் இங்கு எதுவும் மிஞ்சியிருக்காது.

பிரபாகரன் சண்முகநாதன்

Related Posts

  • மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு…

  • புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தருக்கு அன்று விநோதமான கனவு வந்தது. எப்போதுமே சலனமின்றி இருக்கும் மனம் அன்றைக்கு மாறாக அலைந்துகொண்டே இருந்தது. அவர் தனது ஆப்பிள் வாட்சில் இதய துடிப்பைச் சோதித்தார்.…

  • கார் புராணம்

    கார் புராணம்

    கார் ஓட்டும்போது இயற்கையாகவே தியானம் நிகழ்வதாக ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அவர் சொல்வதை நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன்.  பதினேழு வயதில் காரை அணுக்கமாக உணர்ந்தேன். அதற்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Discover more from எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading