மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு நிலவுகிற திருமணம் சார்ந்த சமூக கட்டமைப்பை முற்போக்கு பூச்சுகளுடன் நிறுவ முயற்சி செய்கிறது.

எனக்குப் பொதுவாக படங்களைப் பற்றி எழுதுவதில் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. முதலாவது படங்களுக்கு இங்கு தரப்படுகிற அபரிமிதமான வரவேற்பு. சினிமாவில் வெற்றி பெற்றவர்களே இந்த சமூகத்தின் முகமாக முன்வைக்கப்படுகின்றனர். அதன் செல்வாக்கு அரசியல் வரை உள்ளது.

கலையில் மிகவும் தாழ்வான ஒரு சமூகம் திரைப்படங்களை தனது கலை உச்சமாகக் கொண்டாடுகிறது. இரண்டாவது எப்போதும் யாராலும் பேசப்படுகிற ஒன்றாக சினிமா இருக்கிறது. லேமேன் ஆர்ட் எப்போதும் உண்மையான ஆர்ட்டுக்கு ஒரு மாத்து குறைவுதான்.

ஆக சினிமா என்பது தன் வாழ்வில் நிகழாத ஒன்று, ஆனால் நிகழுமாயின் மகிழ்ச்சியாக இருக்கும் என மக்கள் நினைக்கக்கூடிய ஒன்றை எப்போதும் தன் கான்டெக்ஸ்டாக எடுத்துக் கொள்ளும். அப்படியான கரு கொண்ட கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெறும். ஆங்காங்கு சில சில முற்போக்கான வசனங்களைத் தூவுவதும் தொன்மங்களை சேர்த்துக் கொள்வதும் படத்தை முழுமையாக்கிவிடும்.

இப்போது மொத ராத்திரி படத்துக்கு வருவோம். இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதாபாத்திர கட்டுமானம். தனித்துவமான பாத்திரங்களை எழுதுவதும் அவர்களை ஒரு கதையில் நிலைநிறுத்துவதும் கதையை நம்பகத்துக்குரியதாக மாற்றும். கதையை நிலத்தோடும் மொழியோடும் கட்டி வைப்பது அதன் அந்நியத்தன்மையை நீக்கி எளிதாக கதைக்குள் நம்மை கொண்டுச் செல்லும். நெல்லை வட்டார மொழியும் படத்தின் கதாபாத்திரங்களின் குணச்சித்திரமும் மிகத் தெளிவாகக் கட்டப்பட்டது இந்தப் படத்தில் உதவியிருக்கிறது. 

இரண்டாவது சமூகத்தில் நடக்கிற விஷயங்களை அப்படியே கதையில் கொண்டு வருவது. இங்கு ஆண்- பெண் உறவுக்கு பெரும்பான்மை வாய்ப்பாக இருப்பாது திருமணங்களே. சாதி சார்ந்து ஏற்பாடு செய்யப்படுகிற திருமணங்கள் இல்லையெனில் இங்கு பெரும்பான்மையானவர்களுக்கு திருமணமே நடந்திருக்காது. இப்படியான அரேஞ்ச்ட் மேரேஜ் கூத்துகள் படத்தில் அப்படியே இடம்பெற்றிருப்பது மற்றொரு பலம்.

இப்போது படத்தின் பிரச்னைக்கு வருவோம். இந்தப் படம் ஒட்டுமொத்தமாக என்ன சொல்ல வருகிறது எனப் பார்த்தால், இங்கு நீ காதலித்தால் ஒன்று ஊர் கோயில் கிணற்றில் விழுந்து சாக நேரிடும் அல்லது உன்னைக் காதலிப்பவன் கடைசி நேரத்தில் கைவிட்டுச் செல்லக்கூடியவனாக இருப்பான். ஆகவே நீ உன் பெற்றோர்/ சமூகம் பார்க்கிற மாப்பிள்ளையை/ பெண்ணைக் கட்டிக் கொள். மிக நிச்சயமாக உன் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். இந்தக் கதை இப்படி பேசவில்லையே என நீங்கள் மறுக்கலாம். ஆனால் இந்தக் கதை பார்ப்பவர்களை இந்தக் கோணத்தில் சிந்திக்க வைக்கும்.

சமூகத்தின் எதார்த்தத்தை முன்வைப்பது பிழையில்லை. ஆனால் சமூகம் பிறழ்வாக இருக்கும்போது அதனை புனிதப்படுத்த முயற்சிப்பது எந்த வகையிலும் கலையின் வேலை அல்ல. 

(ஸ்பாய்லர் அலெர்ட்) கதையில் லட்சிய தம்பதிகளாக காட்டப்படும் மருதுவின் தங்கச்சியும் மாப்பிள்ளையும் அரேஞ்ச்ட் மேரேஜ்ஜில் உருவானவர்கள். தாங்கள் சந்தோசமாக இல்லையா எனக் கேட்டு மருதுவை சம்மதிக்க வைக்கின்றனர்.

மருது, தன் காதலியின் இறப்புக்கு பிறகு இத்தனை பேரின் வற்புறுத்தலில் திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறான். தன் வாழ்வின் அடுத்த கட்டத்தை ஏற்றுக் கொள்கிறான். அந்தப் பெண்ணிடம் முதலிரவில் எப்படி பேச வேண்டும் என ஒத்திகை பார்க்கிறான். பின்னர் அது உடையும்போது சோ கால்ட் முற்போக்கு சிந்தனை மனம் கொண்டவனாக தன் மனைவியை அவளை காதலித்தவன் உடனே அனுப்ப முயற்சிக்கிறான். 

காதலன் அவளை விட்டுச் செல்லும்போது உடன் இருக்க முயற்சிக்கிறான். தன் காதலிபோல அவளை இழந்துவிடக்கூடாது என நினைக்கிறான். அதனாலேயே இவையெல்லாம் செய்வதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பிறகு அவன் பேசுவது அத்தனையும் பெண்ணைத் தன் பக்கம் இழுப்பதற்கான தூண்டில். 

எனக்கு மருது பேசுகிற வசனங்கள் அத்தனை செயற்கையாக இருந்தது. ஐடியலான மேன் ஒரு கதையில் வருவது சரிதான். ஆனால் கதையில் அதற்கான நம்பகத்தன்மை முக்கியம். இன்ஸ்டாகிராமில் தங்கள் காதலர்களுக்குப் பகிரவே பெண்களுக்காக உருவாக்கப்படும் வீடியோக்களின் வசனங்கள் போல அவை இருந்தன. ஒன்றை பிடிக்க வேண்டும் என்று யூகித்து செய்வது செயற்கைத்தன்மையை கொண்டுவந்துவிடும்.

தொன்மத்தை துணைக்கு அழைத்துக் கொள்வதிலும் பிரச்னை இருக்கிறது. பூசாரியாக வருபவர் பேசுகிற வசனங்கள் ‘மாடன் மோட்சம்’ தொடங்கி தமிழில் சிறுதெய்வங்கள் கொண்டு எழுதப்படுகிற அத்தனை கதைகளிலும் இடம் பெறுபவை. (ஜெயமோகனுக்கு நன்றியாவது கொடுத்திருக்கலாம்.)

அந்தப் பெண்ணை சாமியாக பாவித்து பூசாரி கையெடுத்து கும்பிடுகிறார். ப்ரோ அவள் என்ன செய்தாள், பூசாரி ஏன் கும்பிடணும்.

முடிவெடுக்க முடியாத பெண்ணாக அவளது கதாபாத்திரம் வடிவமைக்கப்படுகிறது. இங்கு எப்போதுமே சொல்லிக் கொண்டிருப்பதுபோல ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டுக்கு மயங்கும் பெண் குற்றச்சாட்டுக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை இது.

படத்தின் இறுதியில் மருது பின்னாலேயே ஓடுகிறான். கட்டி வச்சுட்டீங்கள நான் பார்த்துக்குறேன் என்கிறான். அப்படியெல்லாம் அவசியம் இல்லை, மருது. நீங்க பின்னால் போகாமலே இருக்கலாம், அவ அவ வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வாள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

எதார்த்தத்தில் இங்கு நிலவுகிற கல்யாண அமைப்பு, நவீன வாழ்வியலோடு பொருந்த முடியாமல் சிக்கித் திணறுகிறது. 

பாரம்பரியமான திருமணங்கள் சாதியத்தின் பின்னணியில் உருவாக்குகின்றன. ஆனால் நவீன சூழல் புதிது புதிதாக பெண்களையும் ஆண்களையும் உங்கள் முன் கொண்டு வந்து கொட்டிக் கொண்டே இருக்கிறது. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக வீட்டுக்காக ஒரு திருமணமும் சந்தோசத்துக்கான உறவும் நடக்கிறது. 

உறவில் நேர்மையின்மை அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய பிரச்னையாக ஆகக்கூடும். ஒருவேளை இங்கு சாதிய திருமண அமைப்பு உடைக்கப்படுமானால் வாழ்வில் சமரசங்கள் தேவைப்படாமல் ஆகலாம். இரு பாலினத்தவருக்குமே. 

இப்படியான படங்கள் வருவது பிரச்னையில்லை. ஆனால் இன்னமும் ஆணவக்கொலையும் பெண்ணின் மீதான குடும்ப/ சமூக அழுத்தமும் நீடிக்கிற சூழலில் இப்படியான படங்களின் வருகையும் அதற்கான வரவேற்பும் அச்சம் தருகிறது.

பிரபாகரன் சண்முகநாதன்

Related Posts

  • மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு…

  • புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தருக்கு அன்று விநோதமான கனவு வந்தது. எப்போதுமே சலனமின்றி இருக்கும் மனம் அன்றைக்கு மாறாக அலைந்துகொண்டே இருந்தது. அவர் தனது ஆப்பிள் வாட்சில் இதய துடிப்பைச் சோதித்தார்.…

  • கார் புராணம்

    கார் புராணம்

    கார் ஓட்டும்போது இயற்கையாகவே தியானம் நிகழ்வதாக ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அவர் சொல்வதை நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன்.  பதினேழு வயதில் காரை அணுக்கமாக உணர்ந்தேன். அதற்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Discover more from எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading