கார் புராணம்

கார் ஓட்டும்போது இயற்கையாகவே தியானம் நிகழ்வதாக ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அவர் சொல்வதை நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன். 

பதினேழு வயதில் காரை அணுக்கமாக உணர்ந்தேன். அதற்கு முன்பு வரை அது யாரோலோ இயக்கப்படும் கருவி. நான் ஓட்டப் பழகியபோது அது எனக்குத் தோழனாக மாறியது. ஆனால் அதன் பிறகு காரை இன்னும் நெருக்கமானதாக மாற்றிக் கொள்ள மேலும் பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது. இப்போதும் கார் கோரும் செலவுக்கு தயாராகவில்லை எனினும் காரிலேயே பயணிப்பது பிடித்திருக்கிறது. 

இந்த மூன்று மாதங்களில் ஒரு மூவாயிரம் கிமீ பயணம் செய்திருப்பேன். சாலை அப்போதுதான் பனியின் திரையை விலக்கி தன் முகத்தைக் காட்டும் நேரத்தில் தொடங்கி, சாலைக்கும் இரவுக்கும் வித்யாசம் தெரியாத நேரம் வரை காரிலேயே சுற்றியிருக்கிறேன். 

அலுவலக நண்பர்களுடன் காரில் பயணித்திருக்கிறேன். முன்பின் தெரியாது செல்லும் வழியில் இறங்கிக் கொள்வதாக சொல்லும் நபர்களுடன். தெரிந்திருப்பவர்களே வாழ்வின் இறுதிவரை வரப் போவதில்லைதானே. பின் தங்கைகளுடன். அம்மாவுடன். தோழியுடன். அநேக நேரங்களில் தனியாக.

தனியாக பயணிக்கும் ஒவ்வொரு முறையும் காரின் இருப்பை நான் அறிவேன். அதன் பாதுகாப்பான தண்மைக்குள் என்னைப் புதைத்துக் கொள்வேன். வெளியே அகலாத இருட்டும், தெரியாத காட்டின் குரலும் சூழும்போது எனக்கும் புற உலகுக்குமான சுவரை சாளரம் அடைத்துக் கொள்ள கார் என்னைக் காத்திருக்கிறது. 

இன்று கோவையில் இருந்து காரைக்குடி வரை கார் ஓட்டி வந்தேன். ஏறத்தாழ இருநூறு கிமீ. சைந்தவி பாடல்கள் ஒரு சுற்று முடிந்தது. இளையராஜாவின் ‘மாதங்கி மரகதமணி’ சமீபமாக எங்கும் ஓடிக் கொண்டே இருக்கிறது. வீட்டில் எல்லோரும் அந்தப் பாடலுக்கு ரசிகர்களாக இருப்பதால் எப்போது பாடல்கள் ஒலிக்கச் செய்தாலும் முதலில் கேட்கிற பாடலாக அது மாறியிருக்கிறது.

அதன் பிறகு பாடல்களை நிறுத்திவிட்டேன். பின் அம்மா ஊர்க் கதைகளை சொல்லிக்கொண்டு வந்தாள். அவளின் புராணங்களில் எப்போதைக்கும் இரு கூறுகள் இருக்கும். முதலாவது, வலிந்தோர் மீதான அங்கலாய்ப்பு. அவர்கள் அவளுக்கு அளிக்காத இடம் குறித்த பாடு அதில் இருக்கும். இரண்டாவது வலுவில் குறைந்தோர் (இவர்களோடு அவள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வாள்) என்னவாக இருக்கின்றனர் எனத் தொடரும்.

ஒரு எழுத்தாளனுக்குக் கதைகள் கேட்பதைவிட வேறு என்ன இருந்துவிடப் போகிறது. புறம் பேசுவது ஒரு கலை. ஆயிரம் யானையைக் கொன்றவன் என சங்கப் பாடல்கள் பாடுகின்றன. அவன் என்ன ஆயிரம் யானையை உண்மையிலேயே கொன்றிருக்கவா போகிறான். இப்படி நான்கு பேர் பேசி பேசி வளர்த்ததுதானே.

என் காருக்கு சில விழுப்புண்கள் இருக்கும். நானும் காரும் பல்வேறு யுத்த களங்களுக்குச் செல்வது வழக்கம். அப்போது ஏற்பட்ட காயங்கள் அவை. அவற்றை வைத்து என் கார் ஓட்டும் திறமையை மதிப்பிடுபவர்கள் உண்டு. அவர்களைப் பற்றி நாம் பெரிதாக கண்டுகொள்ள வேண்டியதில்லை.

என்னைத் தவிர என் காரை சேதப்படுவதில் இன்னொரு உயிரிக்கும் பங்குண்டு. அவன்தான் பெரிய வேலையாக செய்துவிட்டு போய்விடுவான். அது எலி. கார் வெளியே எடுக்கப்படாமல் இருந்தால் போதும். ராஜாவுக்கு சொப்பனம் கிடைத்ததுபோல ஆகிவிடும். திரும்ப எடுக்கும்போது சீட்டில், கியர் அருகில் உள்ள கப் ஹோல்டரில், என்ஜின் பகுதியில் என எல்லா இடமும் அதன் ராஜ்யம்.

வாட்டர் வாஷ்க்கு கொடுத்து எடுத்தாலும் எலியின் மணம் காரில் இருக்கும். அதனாலேயே ஊரில் இருந்து காரை கோவைக்கு எடுத்து வந்துவிட்டேன்.

கோவையில் எலி கிடையாது என்றில்லை. இன்னும் காருக்கு அவர்களின் பிரதிநிதி யாரும் வரவில்லை. அதற்கு இன்னொரு காரணம், என் அம்மா அங்கொரு பூனைக்கு எஞ்சிய உணவுகளை அளித்து பார்த்து வருகிறாள். அந்தப் பூனை கம்பீரமாக ஏறித் தாவி பைக்கின் சீட்டில் படுத்து உறங்கும். நாம் யாராவது அதனை திடீரென பார்க்க நேர்ந்தாலும், இப்போ அதனால் என்ன என சாவகாசமாக அது நடந்துக் கொள்ளும். பூனைகளின் அகங்காரம் அவற்றின் இனத்துக்கே உண்டு.

ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நான்கு சக்கரங்கள் கொண்ட பெட்டியில் நாம் தொலைதூரத்துக்கு பயணிக்கலாம் என யாராவது சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும். இறுதி யாத்திரையா என யாராவது கேட்டிருக்கவும்கூடும்.

ஒருமுறை எங்கள் நாடக ஒத்திகை நடக்கும் இடத்துக்கு அருகே இருந்த வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த கார் ஆடிக்கொண்டே இருந்தது.

ஆர்வ மிகுதியில் எங்களைப் போலவே என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள விரும்பிய இன்னும் சிலருடன் நாங்களும் நோட்டமிட்டோம். உள்ளே கணவன் மனைவி இருவர் இருந்தனர். இருவருக்கும் ஆக்ரோசமான சண்டை, ஒருவர் மாறி ஒருவர் தாக்கிக் கொண்டனர். கணவன் டாஷ்போர்ட்டில் மனைவியின் தலையை அடிக்க, மனைவி கணவனை திரும்ப தாக்கினார். உங்க சண்டையில் என்னை ஏன்டா படுத்துறீங்க என கார் நிச்சயம் கலங்கியிருக்கும். 

கார் இன்னும் ஒரு வீடுபோல மாறிவிடுகிறது. நியூ யார்க் டைம்ஸில் ஒரு கட்டுரை வாசித்தேன். அதில் ஆமையின் ஓடுகள் குறித்த ஒரு வர்ணனை இருந்தது. ஆமையைக் காக்கும் பொருட்டு அந்த ஓடு இல்லை. அந்த ஓடே ஆமைதான் என அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. 

சில சமயங்களில் அப்படித்தான் எனக்கும் தோன்றும். என்னுடைய நீட்டிக்கப்பட்ட சுயமாகத்தான் இந்த காரை நான் பார்க்கிறேன், அதன் புறக் கீறல்கள் என் அகத்தின் காயங்களே. எனக்குப் பிடிக்காத இடத்தில் இருந்து வெளியேறி காருக்குள் அடைக்கலம் ஆவது எனக்குள் நானே அடைவதுதான். அதன் ஆதுர குரல் அழுத்தமான மெளனம். நீங்கள் காரைவிட்டு இறங்கும்போது கதவை மெதுவாக அடையுங்கள், போதும்.

பிரபாகரன் சண்முகநாதன்

Related Posts

  • மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு…

  • புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தருக்கு அன்று விநோதமான கனவு வந்தது. எப்போதுமே சலனமின்றி இருக்கும் மனம் அன்றைக்கு மாறாக அலைந்துகொண்டே இருந்தது. அவர் தனது ஆப்பிள் வாட்சில் இதய துடிப்பைச் சோதித்தார்.…

  • கார் புராணம்

    கார் புராணம்

    கார் ஓட்டும்போது இயற்கையாகவே தியானம் நிகழ்வதாக ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அவர் சொல்வதை நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன்.  பதினேழு வயதில் காரை அணுக்கமாக உணர்ந்தேன். அதற்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Discover more from எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading