புத்தரின் கனவு (குறுங்கதை)

புத்தருக்கு அன்று விநோதமான கனவு வந்தது. எப்போதுமே சலனமின்றி இருக்கும் மனம் அன்றைக்கு மாறாக அலைந்துகொண்டே இருந்தது. அவர் தனது ஆப்பிள் வாட்சில் இதய துடிப்பைச் சோதித்தார். அதுவும் கூடுதல் என்பதை சொல்லியது.

இதய துடிப்பு சோதிக்கும்போதே தனக்கு வந்திருக்கும் குறுஞ்செய்திகளின் அறிவிப்புகளைப் பார்த்தார். பலரும் அவரை சந்திப்பதற்கான நேரம் வேண்டி கேட்டிருந்தனர். இந்தக் குறுஞ்செய்திகளுக்கு மத்தியில் யசோதரையின் குறுஞ்செய்தி தொலைந்துவிடக்கூடாது என வாட்ஸப்பில் பின் செய்து வைத்திருந்தார்.

யசோதரை, சமீபமாகவே இந்த வார இறுதியில் எங்குச் செல்லலாம் என்பதை திட்டமிட்டே வார நாள்களைக் கழித்துக் கொண்டிருந்தாள். புத்தருக்கு மற்றுமொரு வார இறுதி எனக் கேட்டாலே தலையில் யாரோ சுத்தியலைக் கொண்டு அடிப்பதுபோல தோன்றிவிடுகிறது. 

வாட்ஸப்பில் யசோதரையிடம் இருந்து ஒரு வீடியோவுக்கான இணைப்பு வந்திருந்தது. அந்த இணைப்பைச் சொடுக்கினால் அது இன்ஸ்டாகிராமுக்குச் சென்றது. 

‘அப்படியே கேசுவலா வெளியே வந்தபோது அடடே நாம வந்திருக்க இடம்தான் பாலி. இங்க கொதிக்கிற எரிமலை..’ பார்க்க பார்க்க புத்தருக்குக் கோபம் அதிகமாகவே அவர் திரையை சடாலென மூடினார்.

கோபம் என்பது தன் கையில் இருக்கும் கங்குபோல என அவர் சொன்ன உவமை அவருக்கே நினைவுக்கு வரவும் ஒரு முறை மூச்சினை பார்த்தார். மனம் குளிர்ந்தது.

ராகுலன் என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என புத்தருக்குத் தோன்றியது. புதிதாக வந்திருந்த ஐபோன் டூயோ மீது அவனுக்கு ஆர்வம் இருந்தது. புத்தர் தங்களால் வாங்க முடியும் என்பதற்காகவே ஒன்றை வாங்க வேண்டியதில்லை என அவனிடம் சொல்லியிருந்தார்.

அவர் மனம் நங்கூரமில்லாத கப்பல்போல அலைந்துகொண்டே இருந்தது. புத்தர் சிந்தனையை ஒருமுகப்படுத்தினார். தன் கனவைக் குறித்து யோசிக்கலானார்.

புத்தர் தன் காரின் சீட் பெல்ட்டை கழட்டி விடுகிறார். அந்தச் சாலையில் அத்தனை போக்குவரத்து நெரிசல். ஒவ்வொரு காரும் ஒன்றின் மீது ஒன்று கிட்டத்தட்ட இடித்துவிடும் என்பது போலவே நகர்ந்தது. தன் காரின் இழுதிறனால் நகர்கிறதா இல்லை பின்னால் இருக்கிற கார் நகர்த்திவிடுகிறதா என்கிறளவுக்கு குழப்பம்.

புத்தர் இதற்கு மேல் முடியாது என காரின் கூரை மீது ஏறி அங்கிருந்து பார்த்தபடி காரின் ஸ்டீயரிங்கில் கை வைத்து இயக்குகிறார். கார் எந்த விசையும் இன்றி நகர்கிறது. ஆங்காங்கு காரின் ஓரங்கள் உராய்ந்து தீப்பொறி பறக்கிறது. காரை ஓட்டுபவர்கள் வசைகள் தீப்பொறியைவிட காந்தலாக இருக்கின்றன. புத்தரின் கார் முன்நகர்கிறது. 

கார் நகர நகர வழி தானாகப் பிறக்கிறது. இத்தனை கார்கள் மத்தியில் தன் கார் நகர்கிறது என்பதை ஏன் யாரும் கவனிக்கவில்லை என அவர் யோசிக்கிறார். காரின் கூரை உயர்கிறது. அவர் கை நீள்கிறது. கூரை உயர்ந்து உயர்ந்து அருகில் இருக்கும் உயரமான கட்டடத்தின் அளவுக்குச் சென்றுவிடுகிறது. அவருக்கு கீழே தெரியும் அத்தனையும் மிகச் சிறிதாக தெரிகிறது.

நெரிசல் எல்லாம் தாண்டி இலகுவான சாலைக்கு கார் வந்துவிட்டது. கார் இன்னமும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அடுத்து ஒரு பெரிய தடாகம் குறுக்கிடுகிறது. நிரஞ்சனா ஆறுபோல அந்த தடாகம் தெரிந்ததது. காரில் யசோதரை சத்தமாக ரீல்ஸ் பார்ப்பது காரின் கூரையில் அலைந்துக் கொண்டிருக்கும் புத்தருக்குத் தெரிகிறது.

யசோதாவின் பெயரைச் சொல்லி அவர் அழைக்கிறார். யசோதரைக்கு கேட்கவே இல்லை. ஏர்பாட்ஸில் நாய்ஸ் கேன்சலேஷன் வைத்திருப்பாள்.

அவளை கவனிக்க வைக்க அத்தனை முயற்சிகளையும் புத்தர் செய்கிறார். நகர்ந்துகொண்டிருக்கும் காரின் கண்ணாடியில் கைகளை, கால்களை, முகத்தை எல்லாவற்றையும் காட்டுகிறார். யசோதரை நிமிரவே இல்லை.

இனி எந்தப் பயனும் இல்லை என ஒரு நேரத்தில் அவர் முயற்சிகளை கைவிட கார் தடாகத்துக்குள் செல்கிறது. அப்போதும் யசோதரை ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார். 

புத்தர் காரை விட்டுவிட்டு தண்ணீரில் பாய்ந்து நீந்தி கரையை அடைகிறார். ஒரு பெரிய மண்டபம் அங்குள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் அமர்ந்திருக்கின்றனர்.

இசை நிகழ்ச்சியின் இறுதி பகுதி அரங்கேறி கொண்டிருக்கிறது. பார்வையாளர்கள் கண்ணீர் உகுக்கின்றனர். அந்த ஆலாபனை இன்னும் கொஞ்சம் நீடித்தால் மோட்சம் கிடைத்துவிடும் என்பதுபோல அத்தனை பேரும் உருகுகின்றனர். அவர்கள் மத்தியில் நனைந்த ஆடையுடன் நத்தைகள் மேயும் தலையுடன் புத்தர் அமர்கிறார். யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. 

நிகழ்ச்சி முடிகிறது. அத்தனை பேரும் கலைந்து செல்கின்றனர். தாடகத்தில் விட்ட காரின் நினைவு புத்தருக்கே வரவே அவர் குடுகுடுவென அங்கு ஓடுகிறார். அவர் கார் வெளியே நின்றுகொண்டிருக்கிறது.

யசோதரை கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்ப்பதும் தூரத்தில் ஆயிரம் பேர் மத்தியில் யாரையோ தேடுவதும் அவருக்குத் தெரிகிறது. தன்னைதான் தேடுகிறாள் என்பது தெரிந்ததும் இன்றைக்கு அவளிடம் நன்றாக வாங்கப் போகிறோம் என நினைக்கிறார் புத்தர். நான்கு அடி முன்னேயும் இரண்டு அடி பின்னேயும் நடக்கிறார். பின்னால் யாரோ அவர் தோளில் கை வைக்கிறார்கள். கனவு கலைகிறது.

இப்படியொரு கனவுக்கு என்ன பொருள் இருக்க முடியும் என அவர் சாட்ஜிபிடியிடம் கேட்க போனை எடுக்கிறார்.

யசோதரையிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. திறக்கிறார். ‘அப்படியே கேசுவலா நடந்து நாம வந்திருக்க இடம்தான் அஜந்தா எல்லோரா..’ 

மாடத்தில் நின்று கொண்டிருந்த புத்தர் தன் ஐபோனை தூக்கி தடாகத்தில் எறிந்துவிட்டு மீண்டும் மோன நிலைக்கே திரும்பினார்.

பிரபாகரன் சண்முகநாதன்

Related Posts

  • மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு…

  • புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தருக்கு அன்று விநோதமான கனவு வந்தது. எப்போதுமே சலனமின்றி இருக்கும் மனம் அன்றைக்கு மாறாக அலைந்துகொண்டே இருந்தது. அவர் தனது ஆப்பிள் வாட்சில் இதய துடிப்பைச் சோதித்தார்.…

  • கார் புராணம்

    கார் புராணம்

    கார் ஓட்டும்போது இயற்கையாகவே தியானம் நிகழ்வதாக ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அவர் சொல்வதை நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன்.  பதினேழு வயதில் காரை அணுக்கமாக உணர்ந்தேன். அதற்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Discover more from எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading