தூத்துக்குடி பரோட்டா

அதிகாலை இங்கு வந்து இறங்கியதுமுதலே உடன் வந்த தலைவலியையும் மீறி, பொறிச்ச பரோட்டா சாப்பிட மாலை நகரத்து வீதிகளில் நடக்கத் தொடங்கினேன்.

நகரம் எப்போதும் துபாய் சென்று வந்த வடிவேல்போல ஜிகுஜிகுன்னு இருக்க என்னவெல்லாமோ செய்துக் கொள்கிறது. ஆனால் எந்த ஒப்பனையுமற்ற நகரத்தின் ஆன்மாவின் கன்னச் சுருக்கத்தையும் கைகளின் நடுக்கத்தையும் அந்த ஊரின் பழைய கட்டடங்களும் தெரு அமைப்பும் மரங்களும் காட்டிக் கொடுத்துவிடும். 

இந்தப் பரபரப்பும் மினுமினுப்பும் இல்லாத தெருக்களையும் பதட்டமில்லாத மனிதர்களையும் பார்த்தாலே போதும் எனத் தோன்றிவிடும்.

அப்படியாக ஆள் நடமாட்டமில்லாத தெருக்கள் வழியாக, அருகில் உள்ள நைட் கிளப் ஒன்றுக்கு செல்லத் திட்டமிட்டேன். நைட் கிளப் என்பது இங்கிருக்கும் ஹோட்டல்களின் பொதுவான பெயர். தவறாக யோசிப்பவர்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது.

வழியில் யோக்காபு ஆலயம் ஒன்றின் உச்சியின் சிலுவை ஒளிர்வதை பார்த்தேன். தூத்துக்குடியின் மையப் பகுதியான டூவிபுரத்தில் அமைந்திருக்கிற தேவாலயம். பிரிட்டிஷ் ஆட்சியர் சிசில் டூவி என்பவரின் நினைவாக சூட்டப்பட்ட பெயர் டூவிபுரம். அதன் குறுக்காக நடந்து சென்றேன்.

டூவிபுரம் தேவாலயம்

பொறிச்ச பரோட்டா முதலில் எப்போது சாப்பிட்டது என யோசித்து பார்த்தால் சென்னை நினைவுக்கு வருகிறது. நண்பன் ஜெகாவும் நானும் வேளச்சேரி அருகே புதிதாக திறக்கப்பட்ட திருநெல்வேலி பரோட்டா கடை ஒன்றுக்குச் சென்றோம். பால்போல ஒரு சால்னா, கெட்டிச் சால்னா பரிமாறினார்கள். ஒரு பரோட்டாவுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. ஸ்கேம் என்றே நினைத்தேன்.

கடந்த ஆண்டு தூத்துக்குடி வந்தபோது உடன் பணிபுரியும் அண்ணன் ஒருவர் நைட் கிளப் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். நன்றாக இருந்ததாக நினைவு.

இன்று மீண்டும் அந்தக் கடைக்குச் சென்றேன். கடை முழுக்க புகை நிரம்பியிருந்தது. அசைவ கடையில் மணக்க மணக்க சாம்பிராணி புகைய விடுவதும் கல்லா பெட்டியில் பட்டை அடித்து அமர்ந்திருப்பதும், தமிழ்நாடு முழுக்க செட்டிநாடு என ஸ்கேம் செய்பவர்களின் ஊரில் இருந்து வந்திருப்பவனுக்கு புதிது ஒன்றும் இல்லை. 

கடையில் அமர்வது வரைக்கும்தான் அந்தப் புகை தொந்தரவாக இருந்தது. அதன் பிறகு அந்தப் புகையில் நாமும் கரைந்து விடுவோம். அவ்வவ்போது யாரேனும் திரையை விலக்கிக் கொண்டு வந்தால் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். 

ரோபோ சங்கர் சட்டையை பின்னால் தூக்கிவிட்டுக் கொள்வதுபோல ஒரு சர்வர் அண்ணன் தோரணையாக வந்தார். வந்ததும் ‘என்ன இருக்கிறது?’ எனக் கேட்பதற்குள், ‘கோழியா, காடையா’ என்றார். எனக்குப் புரியவில்லை. அவரிடம் ‘என்ன?’ என்றேன்.

‘இல்ல, கோழியா, காடையா’ என்றார். நான் ஒன்றும் புரியாமல் ‘கோழி’ என்றேன். அவர் மீண்டும் ‘நாட்டுக் கோழியா’ என்றார். ‘இல்ல, கோழி போதும்’ என்றேன். 

தெய்வத் திருமகள் படத்தில் ஒரு வசனம் வரும், ‘சம்பந்தப்பட்ட இரண்டு பேர்ல யாருக்காச்சும் ஒருத்தருக்கு புரிஞ்சா போதாது’. அவருக்குப் புரிஞ்சா போதும், நான் யோசிப்பதை விட்டுவிட்டேன்.

நகர்ந்து சென்றவர், கடையின் முன்புறம் பரோட்டா வெந்துக் கொண்டிருந்த கல்லின் அருகில் இருந்த ஒரு அண்டாவின் மீது தட்டை வைத்து வாழை இலையில் இரண்டு பரோட்டாக்களை வைத்தார். கைகளை ஒன்றோடொன்று உரசிக் கொண்டவர் பரோட்டாவை இரண்டு கையாலும் எடுத்து ஒரு தட்டு தட்டி பிய்த்து போட்டார். சேர்ந்திருக்கும் துண்டுகளை உதிர்த்துவிட்டு எங்கிருந்தோ ஆவி பறக்கும் குழம்பை அதன் மீது ஊற்றினார். கோழியின் ஒரு கால் சேர்த்த சதை பகுதியை வைத்து எடுத்து வந்தார்.

நான் பரோட்டா சொல்லவே இல்லை. அவராகவே எனக்கும் சேர்த்து முடிவெடுத்தார். எனக்காக முடிவெடுப்பவர்களை எப்போதும் எனக்குப் பிடித்துவிடும். அவர்கள் என் வேலையை எளிதாக்குகிறார்கள்.

என் முதல் காதலி, ‘என்னைப் பிடித்திருக்கிறதா?’ என்று என்னிடம் ஒருபோதும் கேட்டதில்லை. ‘என்னை ஏன் உனக்குப் பிடித்திருக்கிறது?’ என்பதுதான் அவள் கேள்வி.

அவளை எனக்குப் பிடித்திருக்கிறது என ஒருபோதும் நான் அவளிடம் சொல்லியிராதபோதும் அவள் எனக்காக முடிவெடுத்துவிட்டாள். நான், ‘நீ அழகாக இருக்கிறதால என்னவோ’ என்றேன். அங்குத் தொடங்கியது. சரி, அதை விடுங்க. பரோட்டாவுக்கு வருவோம்.

இலையை தட்டில் இருந்து உருவி டேபிள் மீது வைத்தார். ‘சாப்பிட்டு சொல்லுங்க’ என்றார்.

பரோட்டாவை பிய்த்துபோட்ட அவரின் கைகள் அசுத்தமாய் இல்லாதிருக்கட்டும் எனத் தேவனிடம் வேண்டிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினேன்.

அடுத்து ஒரு இரண்டு முறை வந்து பார்த்துவிட்டு சென்றிருப்பார். பரோட்டா முடிந்ததும் ‘வேறு என்ன வேண்டும்’ என்றார்.

பின்னர் அவரே, ‘இடியாப்பம் சாப்பிடுங்க’ என எடுத்துவரச் சென்றுவிட்டார். எனக்குக் கண்களில் நீர் கோர்த்துவிட்டது. எழுந்து செல்லும்போது அவர் கையைப் பிடித்தாவது நன்றி சொல்லிவிட்டு போகணும் என நினைத்துக் கொண்டேன். இரண்டு இடியாப்பமும் ஒரு கிண்ணத்தில் குழம்பும் கொண்டுவந்தார். 

சாப்பிடுவதை தொந்தரவு செய்யாமல் கவனித்தார். எங்கள் ஊரில் இதற்கு இலை பார்ப்பது என்று பெயர். விசேஷ வீடுகளில் இலை பார்க்க ஒரு ஆள் இருந்துகொண்டே இருப்பார். அவர் வேலையை விருந்தினர்களுக்கு உபசாரக்குறைவு வராது பரிமாறச் செய்வதுதான்.

இரண்டு முறை கேட்டும் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என் வயிறு நிறைந்ததை அவர் அறிந்திருப்பார் என நினைக்கிறேன். ‘வீட்டுக்கு இரண்டு இடியாப்பம் வாங்கிட்டு போங்க’ என்றார். அவரிடன் என் வீடு இங்கில்லை என்பதை எப்படிச் சொல்ல. வேண்டாம் என தலையசைத்தேன். 

கைகளை கழுவியதும் கல்லா பெட்டி வரை உடன் வந்து இவ்வளவு ரூபா எனச் சொல்லிவிட்டு யோசிக்காமல் திரும்பிச் சென்றார்.

அந்தக் கடை ஒன்றும் பெரிய கடை இல்லை. ஒருவர் இத்தனையையும் டிப்ஸ்காக செய்தார் என நம்பவில்லை. அதற்கு சாட்சியாக அவர் பில் இவ்வளவு சொன்னதும் திரும்பி பார்க்காமல் சென்றார். மனது நிறைவாக இருந்தது.

திரும்பும் வழியில் ஒரு பூங்கா பார்த்தேன். பூங்காவில் அத்தனை மரங்கள். ஆனால் ஒன்றிலும் அசைவில்லை. காற்று பெயருக்குக்கூட எட்டிப் பார்க்கவில்லை. இதமான காலநிலை எதையும் இந்த நகரம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக மனிதர்கள் ஈரம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அதுவே போதும் எனத்தான் தோன்றுகிறது.

பிரபாகரன் சண்முகநாதன்

Related Posts

  • மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு…

  • புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தருக்கு அன்று விநோதமான கனவு வந்தது. எப்போதுமே சலனமின்றி இருக்கும் மனம் அன்றைக்கு மாறாக அலைந்துகொண்டே இருந்தது. அவர் தனது ஆப்பிள் வாட்சில் இதய துடிப்பைச் சோதித்தார்.…

  • கார் புராணம்

    கார் புராணம்

    கார் ஓட்டும்போது இயற்கையாகவே தியானம் நிகழ்வதாக ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அவர் சொல்வதை நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன்.  பதினேழு வயதில் காரை அணுக்கமாக உணர்ந்தேன். அதற்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Discover more from எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading