கோவையில் இருந்து நாகர்கோயில் செல்லும் ரயிலில் அமர்ந்திருக்கிறேன். இந்த வாரத்தின் இரண்டாவது பயணம் இது. இப்போதுதான் ஊரில் இருந்து திரும்பியிருந்தேன். இடைவிடாத பயணங்களும் ஒருவகையில் அமைதியை தருகின்றன. ஓரிடத்தில் நிற்கும்போது ஏற்படுகிற மனச்சோர்வு அலைந்துக் கொண்டே இருக்கும்போது தோன்றுவதில்ல.
எனக்குப் பயணம் என்றால் எப்போதும் பிடித்தமானது. ஆனால் அதே நேரத்தில், பயணம் செய்வதற்கான போக்குவரத்து, உணவு, தங்குமிடத்துக்கான ஏற்பாடு எல்லாமும் ஆயத்தமாக இருக்கும்போது மனம் கேட்பது ‘போய்த்தான் ஆக வேண்டுமா?’.
எப்போதிருந்து எனத் தெரியவில்லை. எல்லா பயணத்துக்கும் முன்பாக இந்தக் கேள்வியையும் அதனை மனசாட்சியற்று எழுப்பும் மனக்குரலையும் சந்திக்க வேண்டியதாகிவிடுகிறது.
அப்பா சொல்வார், ரயிலாக இருந்தால் ஒரு மணிநேரம் முன்னதாக அங்கிருக்க வேண்டும். எல்லா மகன்களுக்கும் முதல் வியப்பும் மறுப்பும் ஒருவரிடத்திலேயே தோன்றும். பின்னர் அவர் சொல்வது சரிதான் என்கிற முடிவுக்கு வர வேண்டியதாகிவிடும், விரும்பியோ விரும்பாமலோ.
ரயிலுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அங்கிருக்கும்படி திட்டமிட்டேன். வீட்டிலிருந்து ரயில் நிலையத்துக்கு செல்வதற்கு டாக்ஸி. ஆனால் கார் நிதானமாக செல்லவில்லை. அவசரமும் திடுக்கிடலும் ஓட்டுநரிடம் இருந்துகொண்டே இருந்தது.
ஓட்டுநர் வழியெல்லாம் குறுக்கே வருபவர்களை பார்த்து ‘உச்’ கொட்டிக் கொண்டும் திட்டிக் கொண்டும் தனக்கு முன் சென்ற ஒருவரை வேகமாக முந்தியும் சென்று கொண்டிருந்தார்.
நான் அவரிடம் பேசினேன், “உங்க ட்யூட்டி முடிக்கிற நேரமா”.
“இல்லை” என்றார். “மெதுவாக போகலாமே” என்றேன். ஒரு நொடி கண்களை நேராக பார்த்தவர், சிரித்தார். “சரிதான் அண்ணே” என்றார்.
அந்த ‘அண்ணே’வில் அவர் இந்த ஊர் இல்லையென்பது தெரிந்தது. உரையாடல் தொடங்க போதுமான குறிப்பு. எங்கே என்ற கேள்விக்கு “மயிலாடுதுறை” என்றார்.
மயிலாடுதுறை நான் அறிந்த ஊர். அப்படியே அவரிடம் பேசிக்கொண்டு வந்தேன்.
“நீங்க எரிச்சல்படுறதாலோ அல்லது கோபப்படுறதாலோ, எதிரில் குறுக்கே வருபவர்களுக்கு எதுவும் ஆகப் போவதில்லை. மாறாக நாம்தான் சோர்வடைகிறோம். நம் ஆற்றல் வீணாகிறது” என்றேன்.
“அண்ணே நீங்க டீச்சரா” என்றார். “இல்லை. ஆனா டீச்சர் மாதிரி” என்றேன்.
குழந்தைகளிடம் பேசி பேசி நான் பேசுகிற வேகம் குறைந்திருக்கிறது என நினைக்கிறேன். அதனை மிகச்சரியாக கணிக்க முடிகிறவராக அவர் இருந்தார்.
நேரத்துக்கு முன்னதாகவே ரயில் நிலையத்துக்குக் கொண்டு வந்துவிட்டார். சிரித்துக் கொண்டே அவரிடம் விடைபெற்றேன்.
இந்த ரயிலை நான் எத்தனை முறை சந்திக்கிறேன். ரயிலுக்கு உண்மையாக ஒரு உயிர் இருக்குமானால் அது எத்தனை ஆயிரம் மனிதர்களை நாள்தோறும் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஆயிரம் பேரின் கதைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அவர்களை இங்கும் அங்கும் அழைத்துக் கொண்டு செல்கிறது. அவர்களுக்கு தன்னுள்ளே எல்லா வகையிலும் இருந்துகொள்ள இடமளிக்கிறது.
ஒரு உடலுக்குள், ஒருவர் மிக வசதியாக ஓய்வெடுத்துக் கொண்டு பயணிக்கிற அதே வேளையில் அவர் படுத்திருப்பதற்கும் குறைவான பரப்பில் எட்டு பேர் இடுக்கிக் கொண்டு அமர்ந்திருப்பதும் உண்டு.
ஒரு ரயிலின் அத்தனை வகுப்புகளிலும் நான் சென்றிருக்கிறேன்.
இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. அன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை என் பைக்குள் இருந்தது. ஒரு இரண்டாம் தரமான தோல்ப்பை. அப்போது அதுவே பெரிது.
அதனை கைகளுக்குள் பிடித்துக் கொண்டு, ஆயிரம் பேர் முன்பு பரிசு வாங்கிய மேடையில் அணிந்திருந்த அதே சட்டை காற்சாராயுடன் பதினைந்து பேருடன் ஒருவனாக துர்நாற்றமே காற்றாக நிறைந்த கழிவறை அருகே இருக்கும் வாசலின் கதவுக்கும் நடக்கும் பாதைக்கும் இடையில் அமர்ந்திருந்த இரவு.
கழிவறைக்குச் செல்லும் காலணிகளில் உலர்ந்த மண்ணும், சென்று வந்த பிறகான ஈரமும் உரசியும் உரசாமலும் கடக்கும் வழியில் நான் அமர்ந்திருந்தேன்.
உலகின் அத்தனை பெருமையும் எனக்கே கிடைத்ததாக தோன்றிய அதே நாளில் உலகின் அத்தனை இழிவும் எனக்கு நடந்ததாக மனது கனத்தது.
காதலின் ஆரம்ப நாள்களில் காதலியுடன் பேசும் தீவிரத்துக்குச் சற்றும் குறையாமல் ரயில் அக்கறையோடு நடத்திய நாள்களும் உண்டு. அருவெறுப்போடு பார்க்கும் கண்களில் இருந்து தப்பிக்க ஓடி ஒளியும் உயிரினத்துக்கான அவமானத்தை அளித்த நாள்களும் உண்டு.
ஆனாலும் எத்தனை முறை பிரிந்து சென்றாலும் திருப்பி வெட்கம் கேட்டு யார் வாசலில் சென்று நிற்கிறோமா அந்தக் காதலி போலவே ரயிலிடம் வந்து சேர வேண்டியிருக்கிறது.
ரயில் சிலருக்கு கனவான். சிலருக்கு அதிகாரி. சிலருக்கு முதலாளி. சிலருக்கு வேலையாள்.
அப்பாவுடன் முதன்முதலாக ரயிலில் சென்றது நினைவுக்கு வருகிறது. அப்பா ரயிலின் வாசல் கதவுக்கு அருகே அழைத்துச் சென்றார்.
கதவினை வலது கையில் பிடித்துக் கொண்டு ஒரு பக்கமாக சாய்ந்து நின்று கொண்டார். அவர் கால்களுக்கிடையில் நிற்க வைத்து இந்தக் காற்றைப் பார் என்றார். அத்தனை வேகமாக காற்று முகத்தில் அறைந்து அதற்கு முன் நான் பார்த்ததில்லை.
முகமெல்லாம் பயமும் ஆர்வமுமாக அப்பாவையும் கதவையும் மாறி மாறி பிடித்துக் கொண்டேன். சிறிது நேரத்துக்கு பிறகு அங்கேயே அமர்ந்து ரயில்வழியில் கடக்கும் விஷயங்களைக் கவனித்தோம்.
மனிதனின் மிக உன்னதமான கண்டுபிடிப்பு என ஒன்று இருக்குமானால் அது ரயிலாகத்தான் இருக்க முடியும்.
இப்போதும் ஒரு தாலாட்டுபோல ரயில் அசைகிறது. சாதாரண மனிதர்களுக்கான தேவலோக விமானம். சாதாரணத்தில் சாதாரணமானவர்களுக்கும் அது கருணையோடிருக்கிறது. ஆனால் அதன் ராட்சச குணம் யாரும் அறியக்கூடாதது. ஒட்டுமொத்த இயந்திரங்களின் விதியும் ஒன்றுதான்.
இப்போது ‘போகலாம்’ எனத் தோன்றுகிறது.
பிரபாகரன் சண்முகநாதன்




மறுமொழியொன்றை இடுங்கள்