மலைகள் ஞானிகள். தீபோல அமர்ந்திருக்கும் தீரர்கள். பாந்தமானவர்கள். ஓடிப் போய் அணைத்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றும் மழலைகள். நினைத்து நினைத்து வியந்து உன்னதத்தின் சிலிர்ப்பில், பாதங்களில் சரணடைந்துவிடத் தோன்றும் திருவுருக்கள். பாதுகாவலர்கள். அத்தனையும் அவர்களே.
அலுவல் நிமித்தமாக மலைகளால் சூழப்பட்ட நிலப்பகுதியில் இருந்துகொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். இங்கு விடிந்ததுமுதல் உறங்குவதுவரை, ஒரு முறையேனும் பார்த்துவிட்டு வியக்காது கண்களைத் தாழ்த்தவே முடிவதில்லை.
ஆதுரமான உணர்வைப் பெறுகிறேன். யாரோ இந்த உலகின் ஒட்டுமொத்த தீங்கிலிருந்தும் பாதுகாக்க ஒரு கோடு கிழித்து வைத்ததுபோல மலைகளின் அருகில் வரும்போது இருக்கிறது. ஒரு மலையுச்சியில் நிற்கும்போது உலகின் அத்தனையும் காலின்கீழே எனத் தோன்றிவிடுகிறது. மலையை கீழிருந்து பார்க்கும்போது நாம் எத்தனை தூரம் சிறியவர்கள் என உணர முடிகிறது. ஒரே நேரத்தில் எல்லாமுமாக இருக்கும் மலை.
அறிவியல் கொடுக்கிற விளக்கம்-இரு நிலப்பரப்புகள் ஒன்றோடொன்று மோதி இரண்டாலும் தாழ்ந்துபோக முடியாததால் முளைத்து நிற்கும் நிலத்தின் துண்டுகளே மலைகள். அழுத்தத்தால் மலை உயர்ந்துகொண்டும் கடலாலும் காற்றாலும் தாழ்ந்துக்கொண்டும் இரண்டுக்கும் இடையில் யாருக்குக் கொடுத்த சத்தியத்தின் பொருட்டு நிலைத்து நிற்கின்றன.
மல் என்றால் உயர்வு, வலிமை என்றெல்லாம் பொருள் உண்டு. ஐ என்றால் வியப்பு. உயர்ந்து நிற்கிற ஒன்றின் மீதான வியப்பே ‘மலை’ என்கிற சொல். இப்படிப் பொருள் கொண்டால் ஒன்றிற்கு பெயர் வைக்கும்போதே அதன் மீதான தன் உணர்வையும் கடத்த முயன்றவன் மீது அளப்பரிய அன்பே மிகுகிறது. அல் என்றால் அலைதல், ஐ என்றால் வியப்பு-கடலில் அலைகிற நீரின் மீதான வியப்பு ‘அலை’.
மலைகள் நிலத்தின் அலைகள். நிலத்தின் அலைகளில் உருவாகிற சுனைகளில் இருந்து ஆறுகள் பிறக்கின்றன. ஆறுகள் உயிர்களுக்குமான தாய். அவள் சுரக்கிற அமுதில் தாவரங்களும், உயிரினங்களும் திழைக்கின்றன.
மலைகள் நிலப்பரப்பின் அழகிய பருக்கள். இளம்பெண்ணின் முகத்தில் வெட்கத்தால் சிவக்கும் பருக்கள். அதிகாலை சூரியனின் இளம்கதிர்களில் மலைகள் பூக்கும் புன்னகைபோல.
ஆகாய நோக்கில் பார்க்கும்போது, பள்ளிவிட்டு ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நடக்கும் குழந்தைகள்போல மலைகள் ஒன்றோடொன்று கைக்கோர்த்து நிற்கின்றன. குழந்தைகளிடையே தென்படும் அதே வரிசையின்மை இவற்றிடமும் ஒன்று. ஒன்று, ஒருபக்கம் திரும்பியிருந்தால் மற்றொன்று, இன்னொரு பக்கம் திரும்பியிருக்கும்.
மலைகளைக் குச்சி கொண்டு ஆடுகளைப் பத்துபவன் எவனோ வழிநடத்தவும் கூடலாம். வாகனங்கள் விரையும் சாலையில் இடமும் வலமுமாக ஆடி ஆடி நடக்கும், தன் கெண்டை கால் அளவுக்கு புழுதியை பரத்தும் ஆட்டு மந்தையாக இவற்றையும் பார்க்க முடியும்.
மலையின் ஊடான சாலைகள் பயமுறுத்துபவை. மலைகளுக்கு இடையேயான கணவாய் குறித்த கதைகளை அக்கா ஒருவர் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தக் கணவாயில் கடக்கும் வாகனங்கள் அநேகம். ஆனால் சில நாள்களில் அவை காவுக்கு ஆளாகவும் செய்யலாம்.
மலைகள் ராட்சதர்கள் எனத் தோன்றாமல் இல்லை. அழகான அத்தனையிலும் ஒரு குரூரம் உண்டுதானே. பெண்ணின் சேலை மடிப்புகள் காவு கொள்ளாததையா இந்த மலை காவு கொள்ளப் போகிறது.
சில நேரங்களில் முயன்று கிடைக்கும் நட்பு மலைகளிடம் உண்டு. அவற்றின் சவாலான தாழ்வு உயர்வுகள், கோணல் மாணல்கள், பிடித்த பிடிப்பற்ற விளிம்புகள் என எல்லாவற்றையும் கடந்து அதன் உச்சியில் சென்று நிற்கும்போது தன்னைவிட சிறந்தவனான ஒருவனின் நட்பு தரும் பெருமிதத்தை அது தரும்.
இரவுகளில் மலைகள் ஓநாய் கூட்டமாக மாறிவிடும். அதன் இருட்டு பூமி காணாதது. அதன் குரல் காதுகள் கேளாதது. வானின் ஒளி அத்தனையையும் மறைத்துக்கொண்டு, இரவுகளில் போர்வைக்குள் ஒளிர்ந்திருக்கும் குழந்தையின் கண்களுக்கு பயத்தைத்தரும் இருட்டுக்கு ஒப்பாக நிற்பவை.
இமைகளை மெதுவாக அழுத்தினால் அவை சொல் பேச்சுக் கேட்காமல் திறந்துக்கொள்ளும் என அழுத்தி மூடி கன்னங்களில் சுருக்கங்களைக் காண்பிக்கும் குழந்தைகளைப்போல குட்டி மலைகளும் அந்த இருட்டைப் பார்த்து கண்களை மூடிக் கொள்ளுமாக இருக்கும்.
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும்போது ‘உறைந்து நில்’ எனச் சொல்லி நிறுத்திய யானைக் கூட்டம் எனவும் மலைகளைச் சொல்லலாம். காலின் இடையிடையே புகுந்து விளையாடிய குட்டி மலைகள், அம்மா மலைகளின் அருகிலேயே ‘உறைந்து நில்’ எனச் சொன்னபோது நின்றுவிட்டன.
காலில் ஈரப்பதம் நீங்கிய பிறகு ஒட்டி நிற்கும் கடற்மணலை தட்டிவிடுவதுபோல யாரேனும் இந்த மலைகளைத் தட்டிவிடவும்கூடும். அப்போது அவை கடலுக்குத் திரும்பும் ஆமைகளாக நிலத்திற்கே திரும்பவும்கூடும். ஆனால் அப்படியாகும்போது அதனை பார்க்க யாரும் இருக்க போவதில்லை.
மலையில் பெய்யும் மழை வீரியமானது. மழை, மலைக்குக் காட்டும் கருணை நிலத்திற்கு காட்டும் கருணைவிட அதிகம்தான். மூத்த பிள்ளைக்குக் கூடுதலாக அம்மா எடுத்து வைக்கும் இரண்டு கறித்துண்டுகள்.
மலையில் சடசடவென அடிக்கும் சாரலும் காற்றும் பலம் வாய்ந்தவை. சில நேரங்களில் அன்பின் மிகுதியைத் தாங்க முடியாது தோல்வியுறும் உறவுபோல மழையின் இந்தக் கரிசனத்தைத் தாங்கவொண்ணாத மலை தன் பாறைகளைத் தன்னிடமிருந்து போகவும் அனுமதிக்கிறது. நிலச்சரிவுகளாக அவை நடக்கின்றன. கேக்கை வெட்டிய கத்தி அகன்ற பிறகும் உதிர்ந்துக் கொண்டிருக்கும் கேக்கின் துகள்கள்போல.
மலைகள் ஒருபோதும் கைவிடாதவை. நாம்தான் அவற்றின் அன்பிலிருந்து தப்பிக்க ஓடிப்போக வேண்டியிருக்கும். ஆனால் எப்போது திரும்பினாலும் அணைத்துக் கொள்ளும் கருணை அவற்றிற்கு உண்டு.
பிரபாகரன் சண்முகநாதன்




மறுமொழியொன்றை இடுங்கள்