அன்பின் வெயில்

இப்படியொரு விதி உண்டு. எல்லா பரிவர்த்தனைக்கும் ஈடான இன்னொரு பரிவர்த்தனை உண்டு. இங்கிருந்து நீங்கள் ஒன்று எடுத்துக்கொண்டால் அதற்கு ஈடான ஒன்றை கொடுக்க வேண்டும். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். அன்பிற்கும்.

அடிப்படையில் அன்பு என்பது வேதனையானது. அன்புக்கு ஈடாக எப்போதும் எதையாவது ஒன்றை இழந்தே ஆக வேண்டும். அன்பு அழைத்து வரும் மனிதர்கள் காவு கேட்பது நம் நிம்மதியாகக்கூட இருக்கலாம்.

யூமாவின் ‘மஞ்சள் வெயில்’ வாசித்துவிட்டு மனம் கனக்க அமர்ந்திருந்தேன். காதலின் வஞ்சத்துக்கு, ஏமாற்றத்துக்கு சிறு மனம் அளிக்கும் எதிர்வினை என்பது பெரும்குளத்தின் பரப்பில் ஒரு கூழாங்கல் உருவாக்கும் சலனம் அளவிலானதே. 

மஞ்சள் வெயில் நாவலின் முன்படம்

மஞ்சள் வெயில், ஒரு இளைஞனின் காதல் கதை. தன்னுள்ளே ஒடுங்கும் ஒரு இளைஞன். கனவுலகில் எப்போதும் சஞ்சரிப்பவன்.

அவன் உலகம் எளிய மனிதர்களால் ஆனது. தெருவில் விசில் ஊதும் வாட்ச்மேன் தொடங்கி, மகளை இழந்துவிட்டு மனம் பிறழ்ந்து சுற்றும் சேட்டு, பரதேசியாக அலையும் சூஃபி பாடகன் கான் இப்படி அத்தனை பேருக்கும் ஏதாவதொரு வகையில் புகலிடமாக அன்பை அளிப்பவன். அதனாலேயே அவர்களிடமிருந்து அன்பைப் பெறவும் செய்பவன். கவிதை, ஓவியம் என ஒன்றுக்கும் உதவாதவற்றின் மீது பெருங்காதலோடு இருப்பவன்.

அவனின் பகலில் ஒரு காற்று வீசுகிறது. அது வரையிலான அவனின் தனிமை அத்தனையையும் தூக்கிப் போடும் ஒரு காதல். அந்தக் காதல் வந்த வேகத்தில் அவனைத் தனதாக்கிக் கொள்கிறது.

அவன் மிதக்கிறான். வெகுகாலம் நீடிக்காத காதல் விரைவில் சொல்லிக் கொள்ளாமல் போகிறது, எப்படி வாழ்வில் வந்ததோ அதேபோல. அவன் பித்து நிலைக்கு அருகில் செல்கிறான். அவனால் ஒருபோதும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாத இந்தப் பிரிவு அவனை உருக்குலைக்கிறது. ஆனால் எதன் பொருட்டும் அவன் அவளை சபிக்க விரும்பவில்லை. அவள் நன்றாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறான்.

நாவல் வாசித்து முடிக்கையில் ஓராயிரம் முறை ஜீவிதாவின் பெயரை கதிரவனோடு சேர்ந்து நாமும் உச்சரித்திருப்போம். இது கதிரவனின் கதை மட்டுமல்ல. கடவுளிடம் பிரார்த்திப்பதுபோல அன்புக்காக ஒருவரிடம் இறைஞ்சும் ஓராயிரம் பேரின் கதையும் இதுதான். காதலின் கதை இப்படித்தான் இருக்க முடியும்.

நாவல்-நிகழ்வுகளாக இல்லாமல் நினைவின் சொற்களாக இருக்கிறது. கதைச்சொல்லியின் உரையாடலில் இருந்து நாம் நிகழ்வுகளைக் கிரகித்துக் கொள்கிறோம். 

நாவலில் வரும் மொழி அசாதாரணமானது. உவமைகள். படிமங்கள். ஓரிடத்தில் நெஞ்சு கனக்கிறது என்பது, ‘நெஞ்சில் திடுதிடுவென்று மணல் மூட்டைகள் அடுக்கப்படுவதைப்போல அதிகரித்துவரும் கனம்’ என வருகிறது.

ஒரே நேரத்தில் குழந்தையைப் போலவும் ஞானியைப் போலவும் அலைக்கழியும் மனம் கொண்டிருப்பவன். என்ன செய்தும் நிரப்ப முடியாத துயர் கொள்ளும்போது சமாளிக்க முடியாதது ஆகிறது. 

கதையில் ஒரு படிமம் வருகிறது. ஒரு பேருந்து நிலையத்தில் பித்து பிடித்தவன்போல இருப்பவன் கையில் வைத்திருக்கிற சாக்கை சுவற்றில் மாறி மாறி அடிக்கிறான். அது ஈர சாக்கு. ஒவ்வொரு முறை அவன் அடிக்கும்போதும் ஒரு நாயின் ஈன ஸ்வரம் கேக்கிறது. சுற்றி இருப்பவர்கள் அவன் ஒரு நாயை சாக்கில் கட்டி சுவற்றில் அடிப்பதாக நினைத்து அவனை நெருங்குகிறார்கள். சாக்கைக் கீழே கொட்டிப்பார்க்கும்போது அதில் தேங்காய்சில்லுகள் இருக்கின்றன. நாய் அலறுவதுபோல அவனே கத்தியிருக்கிறான். அத்தனை பேரையும் முட்டாள் ஆக்கிய அவன் சிரிக்கிறான். இந்தப் படிமத்தின் தேங்காய்ச்சில்லோடு தன் தலையை ஒப்பிடுகிறான் கதைச்சொல்லி. அதிர்வு தரக்கூடிய இப்படியான படிமங்கள் உண்டு.

உலகம் மிகச் சிறியது. சிறிய உலகில் நாம் எல்லோரும் சிறிய மனிதர்கள். நம் செயல்கள் அத்தனையும் சிறியவை. ஆனால் நாம் சிறியவர்கள் என்பதாலேயே நமக்கு உருவாகும் சந்தோசம், துயரம் எல்லாமும் நமக்குப் பெரிதாக தெரிகிறது. 

துயர் தாங்காது நாவலில் கதைச்சொல்லி முகமெல்லாம் கீறிக் கொள்கிறான். இன்னொரு உணர்வுப்பூர்வமான இடம்-பாலகிருஷ்ணன் கண்ணீர் சிந்தும் இடம். அவரின் வீட்டின் அருகில் இருந்த பனைமரத்தின் அழிவு, அதில் கூடுகட்டிய கிளிகளை எல்லாம் அநாதரவாக்குகிறது.

சாதாரண மனிதர்களால் சாதாரணமாக கடந்துவிடக்கூடியவை எல்லாமும், கிளர்ந்துக் கொண்டே இருக்கும் அன்பின் எழுச்சியால் கலைஞனுக்கு பூதாகரமாக தெரிகிறது. அது தனது ஆயிரங்கரங்களால் அவனை அழுத்துகிறது. அதன் எடை தாளாது அவன் நசிகிறான்.

கதைச்சொல்லியின் உலகம் மிக எளிமையானது. சிறுசிறு விஷயங்களில் சந்தோசம் காண்பது. சிறுசிறு வெற்றிகளால் பண முடிச்சுகளால் நிறைவை உணர்வது.தொடர்வண்டியில் காண்கிற மூதாட்டிக்கு தன்னிடம் இருக்கும் ஒரே ஒரு ரூபாயை நோட்டை யோசிக்காமல் நீட்டுவது. அதனாலேயே அங்கு நடக்கிற பூகம்பங்களுக்கு அதே அளவில் பாதுகாப்பும் கிடைக்கிறது.

வாட்ச்மேனின் ஓய்வெடுக்கும் சிறிய இடத்தில் கதைச்சொல்லியை வைத்து அவனின் காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து குணமாக்கும் நிகழ்வு அதற்கொரு உதாரணம். கதைச்சொல்லியின் எந்தவொரு நண்பரும் அவனைக்கண்டு முகம் சுழிக்கவில்லை. அவனின் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது.

அன்பின் வெம்மை தாள முடியாதது. அதற்கு நாம் தருகிற விலை ஈடு செய்ய முடியாதது. தர்க்கப்பூர்வமான மனிதர்களையே அது ஆட்டுவிக்கும். கனவுப்பூர்வமானவர்களுக்கு சொல்லவா வேண்டும்.

இந்த மிகைப்படுத்தல் இல்லாத இயல்பான உலகம் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. அங்கு பிரிவு என்றால் இந்தளவு ஒப்பாரி இல்லை. அங்குக் கடந்து செல்லும் காதல் இயல்பாக உள்ளது.

நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவன் சொன்னது, நாம் காதலிக்கிறோம் என்பதை பற்றி கற்பனை செய்யாமல் காதலிப்பது அத்தனை சுதந்திரமானது என்றான். 

கதைச்சொல்லி காதலிக்காமல் இருந்திருக்கலாம். காதலிக்கப்படாமல் இருந்திருக்கலாம். காதல் என்ற ஒன்றே இல்லாமல் இருந்திருக்கலாம் என்றெல்லாம் தோன்றுகிறது. ஆனால் பின் துயர் எங்குப் போகும். எல்லாமும் வேண்டியதாக இருக்கிறது.

மிக நிச்சயமாகப் பிரிவினால் துயருற்று இருப்பவர்களுக்கு இந்நாவலைப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களை இந்நாவல் தின்றுவிடக்கூடும்.

பிரபாகரன் சண்முகநாதன்

Related Posts

  • மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு…

  • புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தருக்கு அன்று விநோதமான கனவு வந்தது. எப்போதுமே சலனமின்றி இருக்கும் மனம் அன்றைக்கு மாறாக அலைந்துகொண்டே இருந்தது. அவர் தனது ஆப்பிள் வாட்சில் இதய துடிப்பைச் சோதித்தார்.…

  • கார் புராணம்

    கார் புராணம்

    கார் ஓட்டும்போது இயற்கையாகவே தியானம் நிகழ்வதாக ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அவர் சொல்வதை நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன்.  பதினேழு வயதில் காரை அணுக்கமாக உணர்ந்தேன். அதற்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Discover more from எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading