ராதை (சிறுகதை)

1

அந்த அறையின் நிசப்தம் அவனை தொந்தரவுக்கு உள்ளாக்கியது. பார்வையை சன்னலை நோக்கி திருப்பினான். காற்றின் அசைவுக்கு திரைச்சீலை அசைந்து கொண்டிருந்தது. அவனது நினைவை நிகழ்காலத்துக்கு இழுத்து கொண்டுவர அவளின் தொடுகை காரணமாக இருந்தது.

நெஞ்சில் தலை சாய்ந்துக் கொண்டு, விரலின் ஒரு சுற்றளவுக்குக்கூட வராத மார்பின் முடிகளை விரல்களால் சுருட்டியும் நீவியும் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு பெருமூச்சு அவனில் இருந்து எழுந்தது. முகத்தை உயர்த்தி அவன் கண்கள் தன்னை சந்திக்கும்வரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு எதுவும் சொல்லாது இருந்தாள். அவன் ஆழமாக ஒரு முத்தம் பதித்தான். இன்னுமா என நினைத்தவள்போல, முகத்தை அவனிலிருந்து விலக்கி, வலம் முடித்து நிலைக்கே திரும்பும் தேர்போல நெஞ்சுக்கே போய்விட்டாள். மூடியிருந்த போர்வையை விலக்கினான்.

சிவப்பு நிறத்தின் வெவ்வேறு சாயல்களினால் ஆன கோலம் போல அவள் உடல் இருந்தது. ஒருபக்கமாக சாய்ந்து படுத்திருந்தாள். குழிகளாலும் வளைவுகளாலும் ஆன உடல். நீரால் நிறையும் கோப்பைபோல. சிவந்த நிலம்போல. அவன் நிலம் நினைவுக்கு வந்தது. 

பார்வை செல்லும் திசைவரை சிவந்திருக்கும் நிலத்தின் ஏற்ற இறக்கங்கள் ஒரே பார்வையில் அளவிட முடிபவை. நிலத்தைவிட்டு பிரிவதும் ஒரு வகையான பிரிதல்தான்.

சட்டென்று போர்வையை ஒருகையால் இழுக்கப் போனவளை தடுத்தவன், அவளை ரசிப்பதை அத்தனை வெளிப்படையாக காட்டிக்கொண்டான்.

ஒரு கடலின் பேரலை கரை நெருங்க நெருங்க தன் அத்தனை ஆக்ரோசத்தையும் படிப்படியாக உதிர்த்துவிட்டு கரையின் மணலுக்கு நெடுஞ்சாண்கிடையாக விழுவதைபோல அவனின் அத்தனையையும் கட்டிலின் கால்களில் உதிர்த்துவிட்டு அவளிடம் சரணடைந்திருந்தான். உன்மத்தமாக இருந்தது.

இந்த இடத்தில்தானே அத்தனை புத்திஜீவிகளும் கவிஞர்களும் தங்களை தொலைக்கின்றனர் என நினைக்கும்போதே அவனுக்கு சிரிப்பு வந்தது. அதை கவனித்தவள்போல தலையை எட்டி என்னவென புருவங்களால் வினவினாள். ஒன்றுமில்லை என மீண்டும் உதட்டை நெருங்கியவனை தடுத்துவிட்டு அருகில் மாறிக்கொண்டாள்.

தொடர்பில்லாத நிறங்களினால் ஆன சேர்க்கைகள் புருவ மத்தியில் ஒளிவிட பகல் தூக்கத்தில் இருந்து அவன் எழுந்தான். அவள் சென்றிருந்தாள். அவள் இருந்ததற்கான அடையாளங்களாக விரிப்பெங்கும் கூந்தல் முடிகள். அயர்ச்சியாக இருந்தது. சுத்தம் செய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

2

அழைப்புகளுக்கு எந்தப் பதிலும் இல்லை. குறுஞ்செய்திகள் திறக்கப்படாமல் நாள்கணக்காக இருக்கின்றன. 

அன்புக்கு வரம்பு உண்டு என யாரும் சொல்லிக் கொடுத்திருந்தால் அந்தளவில் மட்டும் எதிர்பார்த்திருந்திருக்கலாம். எல்லைகளற்ற அன்பு சிக்கலாகவும் மாறக்கூடும்போல. ஆனால் அந்த வரம்பினை தீர்மானிப்பது எதுவென அல்லது யாரென தெரியவில்லை.

இனியும் காத்திருந்து பயனில்லை எனத் தோன்றிற்று. ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் தானே சென்று அவள்முன் நிற்பது அவனுக்குத் துக்கத்தை கொடுத்தது. சென்று நிற்பதைவிடவும், உன்னை நான் வரச் சொன்னேனா எனக் கேட்பவளின் குரூரத்தின் மீது மானசீகமாக கல்லெறிந்தான்.

அத்தனை அழகிய தருணங்களும் ஒன்றுமே இல்லாதவையாக தெரிந்தன. அந்தத் தருணங்களின் மாய பிடியில் இருந்து மீட்கவே, இப்போது நடப்பவை என எண்ணாமல் இருக்க முடியவில்லை. காலம் அவ்வாறே தன்னை சமன்படுத்திக்கொள்கிறது.

அத்தனை செயலிகளிலும் அவளை தடை செய்தான். எண்ணை சேமிப்பிலிருந்து அகற்றினான். எடுத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், ரகசிய இருப்பிலிருந்தவை உள்பட அத்தனையையும் துடைத்து எறிந்தான். பிரதானமாக குறுஞ்செய்தி வரலாற்றை அழித்தான். ஓராயிரம் உணர்ச்சி பொம்மைகள். பிரிவின் தவிப்பிலிருந்து அவளுக்கும் அவளில் இருந்து பிரிவின் தவிப்புக்கும் அலைபவை. உதட்டை குவித்து கண்களை சுருக்கி உருவாக்கிய முத்த இதயத்தை அனுப்பிவிடாமலும் கீழே நழுவ விட்டுவிடாமலும் ஏந்திக் கொண்டிருப்பவை. நீல மேனியாய் ஒருவரை ஒருவரை ஆதுரமாக அணைத்திருப்பவை. கண்களில் நீரின் ஒளிர்மை தெரிய சிரித்துக் கொண்டிருப்பவை. முகத்தை கோணியிருப்பவை. கண்களை மறைத்திருப்பவை. கண்ணில் இருபக்கமும் நீர்வர இதழ் விரித்து சிரித்துக்கொண்டிருப்பவை. இன்னும் என்னவெல்லாமோ உணர்வுகளை ஏந்தி, உணர்வுகளை காட்டுவதற்காகவே தக்கவைத்துக் கொண்டு நிற்பவை. அத்தனை பொம்மைகளையும் அவற்றின் அர்த்தப்பொதியில் இருந்து விடுவித்தான். இனி அவை காற்றில் பறக்கலாம். அவளிடம் போய் இறைஞ்சிக் கொண்டு இருக்க வேண்டாம்.

இவள் சகவாசமே வேணாம். இனி ஒருபோதும் திரும்ப கூடாது என என்கிற நினைப்போடு அலைபேசி அணைத்து மெத்தையில் தூர எறிந்தான். தூக்கம் கண்களை தழுவ நேரம் எடுக்கும்போல பட்டது. மீண்டும் அலைபேசியை ஒளிரவிட்டவனின் முதல் பார்வையில் எந்த அறிவிப்பும் இல்லாத அலைபேசி வெறுமையாக இருந்தது. அவள் குறித்த கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்க்கிற மனநிலைக்கு மிக அருகில் சென்று திடீரென அதிலிருந்து வெளியேற துடித்தான்.

3

பரபரப்பான சாலையில் கைகளை கோர்த்தபடி இருவரும் நடந்து கொண்டிந்தனர். அவள் விரல்களின் ஊடாக அவன் விரல்கள். அத்தனை வெம்மையாக அவன் எப்போதும் உணர்ந்ததில்லை. கோர்த்த விரல்களோடு, வெளிப்புறத்தின் பனியை நீக்க தணப்பு தேடுபவள் போல கைகளை பற்றியிழுத்து உடல் மீது சாய்ந்துக் கொண்டே நடந்தாள். யாரும் பார்க்கிறார்களா என அவன் கண்கள் அலைந்தன. அவளுக்கு எந்தவிதமான புறச்சூழல் குறித்த பதட்டமும் இல்லை.

ஒரு சாலையின் ஓரமாக போடப்பட்டிருந்த கல்லில் இருவருமாக அமர்ந்தனர். அவள் கையைவிட்டு நீங்கவே இல்லை. ஒரு பெண்ணின் வெம்மைக்கு அருகே உங்களை வைத்தால் அந்த உணர்வுக்கு ஈடாக வேறு எதையும் உங்களால் கூற முடியாது. அவள் துணியின் ஸ்பரிசம் தோலை தொட்டது. அவ்வவ்போது காரணமே இன்றி முகத்தை பார்ப்பதையும் ஏன் எனக் கேட்டால் ஒன்றுமில்லை என உதடுகளாலும் முகத்தாலும் சுழித்து, கண்களை மூடித் திறந்து பதிலளித்துவிட்டு இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொள்வதையும் அவள் மீண்டும் மீண்டும் செய்துக்கொண்டே இருந்தாள்.

மனநிலை பிறழ்ந்தவர்போல இருந்த ஒருவர் அவர்களுக்கு அருகில் வந்து நின்றார். கட்டமிடப்பட்ட வெளுத்த சட்டையின் அடிப்பக்கம் தெரிய அதன் மீது ஒரு பழுப்பு நிறத்தில் மட்கி போன கால்பந்தாட்ட அணியின் டீசர்ட் அணிந்திருந்தார். முன்னர் அது நீல நிறத்திலோ பச்சை நிறத்திலோ இருந்திருக்கலாம். முழங்கால் வரை ஒரு பக்கம் நீட்டி விடப்பட்ட காற்சட்டை மறுபக்கம் கிழிந்து தொங்கியது. அவரிடம் கையில் வேறு எதுவும் இல்லை. முடி கோரமாக விடப்பட்டிருந்தது. 

மனநிலை பிறழ காத்திருந்தவர்களுக்கு மத்தியில் மனநிலை பிறழ்ந்தவராக இருப்பது எளிதானதுதான். அவர்கள் எதிரில் நின்றுக் கொண்டிருந்தவருக்கு என்ன தேவையென முதலில் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் பார்வை அவனிலிருந்து விலகி அவள் மீது படும்போது, சட்டென்று உரைத்தவன்போல எழ முயற்சித்தான். துர்நாற்றம் நாசியை கூசச் செய்தது. அழுக்கும் மண்ணும் வியர்வையும் ஊறி நாள்கணக்கில் இறுகிய முடையில் இருந்து மேலெழும் நாற்றம் அது. 

இவன் எழுவதை அறிந்ததும் அவர் கைகளை நீட்டினார். எதுவுமில்லை என சொன்னபோதும் அவர் நகரவில்லை. வீட்டுக்கு வெளியே கூச்சல் கேட்டு ஏதோ நடப்பதை அறிந்து, தான் வரைந்துக் கொண்டிருந்த மலையையும் சூரியனையும் மரத்தையும் விட்டுவிட்டு எழுந்துவரும் குழந்தையின் கண்களோடு முகத்தை மேல் நோக்கி ஏறிட்டவள் அவரை கண்டதும் திடுக்கிட்டாள்.

இவன் தோளுக்கு அருகில் பற்றியிருந்த அவள் கையினை சற்று தளர்த்தி பிடியை உள்ளங்கை அளவிலேயே நிறுத்திக் கொண்டு எழுந்தான். அந்தக் கையிழுப்பில் அவளும் எழ நேரிட்டது. அவள் எழுந்தபோது சரிகையுடனான அவளது துப்பட்டா அவன் கையில் உரசியது. பனிக்கு உப்பாக திரண்டு இருந்த தோளில் கீறல்கள்.

இவன் எழுந்ததும் அவர் அங்கிருந்து நகன்றார். திரும்பி திரும்பி இவர்களை பார்த்துக்கொண்டே சென்றவர் சாலையோரம் வளர்க்கப்பட்டிருந்த மரத்தின் செங்கல் அரணில் கால்களை இடித்துக்கொண்டு ஒரு வசைச்சொல்லை அங்கேயே உதிர்த்துவிட்டு இடப்பக்கமாக திரும்பி மறைந்தார்.

அவள் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை. ஆனால் அவரை நான் முன்பே அறிந்திருப்பதாக எனக்குப் பட்டது.

4

வானத்தின் நட்சத்திரங்களை எப்போதாவது பார்த்ததுண்டா? அவற்றின் எண்ணிக்கை உங்களை உறைந்து போக செய்யும். அந்த நட்சத்திரங்களை எல்லாம் உலகில் அந்த அந்த நொடியில் கொடுக்கப்படும் முத்தங்களாக கற்பனை செய்து கொள்ளலாம். கோடிக்கணக்கான முத்தங்கள். ஒவ்வொரு நட்சத்திரம் ஒளிரும்போது ஒரு முத்தம் புதிதாக உருவாகிறது.

5

ராதையிடம் எல்லோரும் கேட்கிறார்கள். 

“கிருஷ்ணன் உன்னைப் பிரிந்து போய்விட்டானே. நீ குறையாத உற்சாகத்தோடு இருக்கிறாயே. இன்னும் சொல்லப் போனால் கிருஷ்ணன் இருந்தபோது இருந்தைவிட இப்போது இன்னும் உற்சாகமாக இருக்கிறாய்”

ராதை சொன்னாள், “கிருஷ்ணன் எங்கே போனான்? அவன் இப்போதும் என்னுள்ளே தானே இருக்கிறான்.”

ராதைகளுக்கு மட்டுமே அரூபமான கிருஷ்ணன்கள் போதுமானதாக இருக்கின்றார்கள்.

6

இந்தச் செயலிகள் தனிமையை போக்க வந்தவை அல்ல. நீ எவ்வளவு தனியானவன் எனக் காட்டி காட்டி சுய கழிவிரக்கத்தை உருவாக்க வந்தவை. இவற்றிலிருந்து தப்பிக்கவே ஒவ்வொருத்தனும் இனி போராட நேரிடும்போல. எப்போது நாம் எந்த உணர்வில் இருக்கக் கூடாது என நினைக்கிறோமோ அப்போது தான் அந்த உணர்வை தூண்டும் ஏதோவொன்று நம் கண்ணில் பட்டுவிடும். இரவில் ஆர்வத்தையும் பசியையும் தூண்டும் உணவு சார்ந்த காணொலிகளும் பகலில் வேட்கையையும் ரகசிய விருப்பதையும் வளர்த்தெடுக்கும் காணொலிகளும் தென்படும். 

விதவிதமான இணையர்களின் காணொலிகள். கடற்கரை மணலில் விரல்கள் கோர்த்தபடியும் காபி மேசையில் இதழ்கள் சிரித்தபடியும் சமையலறையில் உடல்கள் உரசியபடியும் வருகிற காணொலிகள் எரிச்சலை கொடுத்தன. ஒவ்வொரு முறை வந்து செல்லும் அவள் நினைவை கலைத்து கலைத்து பார்க்கும்போது மீண்டும் வந்து நிற்கும்- மேகமற்ற வானம்போல அவள் சார்ந்த ஏதோ ஒரு நினைவு.

இந்த அறுக்க முடியாத கண்ணியிலிருந்து தன்னை விடுவிக்க அவன் காலத்தை இறைஞ்சினான். காலமும் அவள் போலவே குரூரமானது. 

7

தனிமையின் ஓராயிரம் நாவுகள் அறையெங்கும் விரிந்து கிடந்தன. அது பசிக்கு இரை தேடும் விலங்கு. எங்கெல்லாம் பேச்சொலிகள் கேட்காது இருக்கிறதோ அங்கெல்லாம் தனது அகோர பசி கொண்ட வயிற்றையும் வயிற்றை நிரப்புவதற்காகவே வளர்க்கப்பட்ட நாவுகளையும் தூக்கிக் கொண்டு அந்த தனிமை வந்துவிடுகிறது. அத்தனை எளிதில் அது இரையையும் தின்று தொலையாது. தனிமைக்கு ஒன்றை உணவாக கொள்வதற்குமுன் செய்வதற்கென்றே சில சடங்குகள் உள்ளன. அந்தச் சடங்குகளில் ஒன்று இரையாகப் போகும் உயிர் முதலில் மனதளவில் நொந்து உருகுலைய வேண்டும். தான் இரையாக போவதன் மூலம் இந்த சித்ரவதைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியும் என அந்த இரை நம்புவது வரை அந்த தனிமை அங்கு காத்திருக்கும். வேட்டையாடப்பட அத்தனை ஆயத்தங்களுடன் வேட்டைக்கு பலியாகும் உயிர் காத்திருக்கும். எல்லாமும் தயாராக இருக்கும்போதே எளிதாக வந்து இரையை கவர்ந்து செல்லும் வேட்டைக்காரன்போல தனிமை வெற்றி களிப்பில் இரையை கவ்விக்கொள்ளும். அதன் செரித்தலுக்கும் கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளும், கன்றை விழுங்கிய மலை பாம்பு போல. 

8

காபியின் மணத்தை அவள் இதழ்களில் உணர்ந்தவன் அவள் அருகில் தன் இதழ்களை கொண்டுசென்றான். அவள் மூச்சை மெல்ல கவனித்தான். அசைவின்றி ஒரு முகமே தன்னருகில் இருப்பதை உணர்ந்த அவள் மூச்சு, அதற்கேற்ப தன் தாளத்தை திட்டமிட்டுக்கொண்டது. அவளை உயிர்ப்பிக்க தேவையான உயிர்வளி அந்தச் சிறு இடைவெளியில் கிடைப்பதை மூச்சு உறுதிப்படுத்திக்கொண்டது. அவள் புருவங்களின் இமைகள் இவன் முகத்தில் உரசி நின்றன.

பிரபஞ்சத்தில் தாகம் கொண்ட மனிதன் இல்லாது இருக்க உருவான திரவம், காதலின் பரிமாற்றத்துக்கு உதவும் பணியை பின்னரே ஏற்றுக்கொண்டிருப்பினும் அதனையே தன் தலையாய பணியாக வரித்துக்கொண்டது. ஒரு சுழலுதலுக்கு பின்னர் இருப்பிடத்துக்கு திரும்பியது முத்தம். அந்த அலைதல் ஒரு ஊசலாட்டம். அலைவிற்கு பிறகு திரும்பும் பெண்டுலம்போல.

இமைகள் திறக்காத முகம். ஆனால் முத்தம் கேட்டு முன்வந்து நிற்கும் முகம். அவள் இதழ்களில் மோதி வலுவிழக்கும் முக தசைகள். நீரை எல்லாம் இழந்த இதழ்கள் தேவைக்கேற்ப விரிந்தும் சுருங்கியும் சறுக்கியும் இடம் கொடுத்தது. இன்னுமொரு முத்தம். இன்னுமொன்று. இன்னும் ஒன்று. இன்னும் நீண்ட ஒன்று. சுருங்கிய ஒன்று. ஒன்று.

9

இந்த மலைகள் காலம் முழுக்க இங்கேயே இருப்பவை. எந்தச் சூழ்நிலையிலும் மலைகள் அசைவதில்லை. மலையை அணைத்துக்கொள்ள ஒரு ராட்சத கை இருந்தால் நன்றாக இருக்கும். அத்தனை பாந்தமாக மலை விளித்தது. ஆட்களையே பார்க்காத பகுதியில் வளர்கிற கன்றுக்குட்டி திடுமென வந்து நிற்கும் அந்நியரை பார்த்து மருள்வதை போல. கண்கொட்டாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்ததாக அவனுக்குப் பட்டது. 

மலையின் அடிவாரம் வரும்வரை மேலே ஏறும் எந்த எண்ணமும் அவனுக்கு இருக்கவில்லை. மலை தன்னை அழைப்பது போல இருந்தது அவனுக்கு.

பாதைகளற்ற சிறு சிறு கற்கள் உருளும் பாதையில் ஒவ்வொரு அடியாக மேலேறினான். மேலே செல்ல செல்ல மலை அவனை அனுமதித்தது.

மலை ஆணா பெண்ணா. மலையில் இத்தனை உயிர்கள் உள்ளன. எனில் நிச்சயம் மலை பெண்ணாக தான் இருக்கவேண்டும். மலைக்கு தன் குட்டிகளை கொண்டுவருகிற ஓராயிரம் தாய்கள் மலை என்னும் பெருந்தாயை நம்புகிறார்கள். தாயிடம் திரும்பும் மகள்.

மலையுச்சியை அடைந்தபோது அவனுக்கு கால்கள் ஆடத்தொடங்கின. தோல்பையை ஓரமாக வைத்துவிட்டு வியர்த்திருந்த உடலை ஈரமற்றதாக்க மேலாடையை அகற்றினான். மலையின் உச்சிக்காற்று ஆசை தீர தன்னை தழுவுவதை அனுமதித்தான். சுகமாக இருந்தது.

10

கிருஷ்ணனே விரும்பியிருந்தாலும் அவனால் ராதையுடன் இருந்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

பிரபாகரன் சண்முகநாதன்

(This story is published exclusively on this website. Reproduction, distribution, republication, or use of any part of this story without the author’s prior permission is strictly prohibited. All rights reserved.)

Related Posts

  • மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு…

  • புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தருக்கு அன்று விநோதமான கனவு வந்தது. எப்போதுமே சலனமின்றி இருக்கும் மனம் அன்றைக்கு மாறாக அலைந்துகொண்டே இருந்தது. அவர் தனது ஆப்பிள் வாட்சில் இதய துடிப்பைச் சோதித்தார்.…

  • கார் புராணம்

    கார் புராணம்

    கார் ஓட்டும்போது இயற்கையாகவே தியானம் நிகழ்வதாக ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அவர் சொல்வதை நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன்.  பதினேழு வயதில் காரை அணுக்கமாக உணர்ந்தேன். அதற்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Discover more from எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading