ஸ்வதர்மத்தை ஜெ தன் மகனுக்கு அறிமுகம் செய்யும் கட்டுரையின் முடிவில் இவனை எதில் சேர்ப்பது என அயர்ச்சி அடைந்திருப்பார். அவரின் மகனின் நிலையில் என்னைக் கற்பனை செய்துக் கொண்டேன். அந்தக் கேள்விதான் எனக்கு இந்த நூலின் தொடக்கமாக இருந்தது. பேச்சு வழக்கில் சொல்ல வேண்டுமென்றால் ‘நான் எதுல சேர்த்தி’ என்பதில் இருந்து தொடங்கியது ஜெயமோகன் எழுதிய தன்மீட்சி நூலுக்கான என் வாசிப்பு.
அடிப்படையில் எனக்கு சில அறிதல்களை நிகழ்த்திய இந்தப் புத்தகத்தின் மீதான என் வாசிப்பை தெரிந்து கொள்ள, முதலில் என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. வாழ்வின் பெருந்துயர் ஒன்றை 18 ஆவது வயதில் நான் சந்திக்க நேர்ந்தது. அதுவரையிலான என்னுடைய நம்பிக்கைகள், தீர்மானங்கள், நெறிமுறைகள் எல்லாவற்றையும் மாற்றிய அந்த நாள் கடந்து நான்கு ஆண்டுகள் இப்போது ஆகியிருப்பினும் அதிலிருந்து மீண்டு இருக்கிறேனா எனத் தெரியவில்லை. ஒருவேளை மீள முடியாத துயராகக்கூட அது இருக்கலாம்.
என்ன செய்வது எனத் தெரியாது ஆற்றலை வீணாக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். இந்த நூல் முழுவதும் கேள்வி கேட்ட அத்தனை பேரும் எனக்காக கேட்டது போலவே தோன்றியது. அல்லது எல்லோருக்கும் ஒரே போல் தான் பிரச்சனையுமா. நிச்சயமாக தெரியவில்லை.

“எது உனக்குரிய செயலோ…”
எது எனக்குரிய செயல் எனத் தீர்மானிக்க என்னிடம் தேர்வுப்பட்டியலில் இருந்த இரு விஷயங்களில் இலக்கியம் என்பதை ‘வீடு பேறு’க்கான ஒன்றாக ஜெ சொல்லவும் எந்தவிதமான குழப்பமும் இன்றி நான் தெரிவு செய்ய வேண்டியது குறித்து அறிந்து கொண்டேன்.
சோம்பலினால் நான் வீணாக்கிய நாட்கள் குறித்த குற்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. ‘அறிவுத்திறனும் நுண்ணறிவும் சாத்தியங்கள் மட்டுமே’ என்கிறார் ஜெ. அந்த அலட்சியம் தான் என்னைச் செயல்பட விடாமல் செய்தது எனக் கண்டடைய எனக்கு தன்மீட்சி உதவியது.
சோம்பல் குறித்த ஜெவின் வரையறை மிகப் பொருத்தமானதாக தோன்றுகிறது. அதி உற்சாகத்திற்கும் தன்னிரக்கத்திற்கும் இடையே சிக்கித் திணறுவதை மீட்க செயலாற்றலால் மட்டுமே முடியும்.
விதி சமைப்பவர்களுக்கு செயலாற்றுவது என்பது பொறுப்பு. சலுகைகளற்ற இந்தச் சமூகத்துக்கு செய்ய வேண்டிய பணிகளுக்கு ஈடாக எதையும் எதிர்பார்க்காது அறிவியக்கத்துக்காக தன்னை ஒப்புக் கொடுக்கும் பணி ஒரு வாய்ப்பு. அதை தவறவிடும் உரிமை கிடையாது.
அந்த வாய்ப்புக்கு ஒப்புக் கொடுக்க நம்மை சீர்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. விதி சமைப்பவர்கள் குறித்து முதல்முறையாக ஜெ வழியாகத்தான் தெரிந்து கொள்கிறேன்.
மன நிறைவும் வாழ்வின் முழுமையும்
வாழ்வின் எல்லா பக்கங்களிலும் நிறைந்திருக்கின்ற அபத்தங்களும் சாதாரணத்தை நோக்கி உந்தும் வாழ்வும் அயர்ச்சியை உண்டாக்கினாலும் அவர்களைப் போலவேதான் நாமும் என்பதற்காக அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் நாமும் செய்யவேண்டும். மற்றும் நமக்கான இன்னொன்றையும் (எது நமக்கு நிறைவளிக்குமோ அது).
இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சமீபத்தில் யுவன் சந்திரசேகர் வருகை தந்த இலக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். வங்கி பணியிலிருக்கும் போது நான் எழுத்தாளன் இல்லை. பணி முடிந்து வீடு திரும்பும் மாலையில் என் அறை கதவை அடைத்த பிறகு நான் எழுத்தாளன். ஜெவும் அதையே சொல்கிறார். இவர்களால் இரண்டையும் ஒருசேர செய்ய முடிந்திருக்கிறது. அதற்கான அக ஊக்கத்தை பெற வேண்டியுள்ளது. ‘நாட்களை அகம் நினைவு கொள்ளும்படி செலவிட்டிருந்தால் அந்த வாழ்க்கை முழுமையானது’ என்கிறார். அந்த முழுமைக்கு செயலாற்ற வேண்டும். செயலாற்றுவதே தன்னிறைவு.
செயலாற்றுதல் வார்த்தையை கட்டுரையின் ஆரம்பத்தில் இருந்து பயன்படுத்தியுள்ளேன். இந்த ஒரு வார்த்தைதான் எனக்கு மீண்டும் மீண்டும் நினைவில் வருறது. இந்த வார்த்தை இத்தனை நாட்களாக என்னிடம்தான் இருந்ததா என ஆச்சரியமாக இருக்கிறது. அதனை நான் மீட்டுக் கொள்ள தன்மீட்சி உதவியிருப்பதாக நம்புகிறேன்.
எல்லா தெய்வங்களும் தலை கேட்பவை
தன்னறத்தையும் சூழலோடு ஒத்துப் போவதையும் சேர்த்தே செய்ய வேண்டியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் செயல்பட வேண்டியுள்ளதைப் பற்றி ஜெ பகர்வது நம்பிக்கையளிக்கிறது. நான் தனியானவன் இல்லை. நான் எதிர்கொள்கிற பிரச்னைகள் எனக்கானது மட்டுமில்லை. இதற்கும் முன்பும் இப்போதும் இதே போலான சிக்கல்களை சந்தித்து கடக்கிறவர்கள் இருக்கின்றனர் என்கிற நம்பிக்கை அது.
செயல்படுகிறவர்கள் குறித்த அறிமுகம் கடைசி அத்தியாயங்களில் வருகிறது. செயலின் விளைவையும் தன்மீட்சியில் அறிகிறேன்.
தற்கொலை தோல்வியை ஜெ இரண்டு இடத்தில் குறிப்பிடுகிறார். அதன் பிறகான வெளிச்சம் நம்பிக்கையளிக்கக் கூடியது. ஒரு திறப்பை சாத்தியப்படுத்தக் கூடியது. ஒளியே வடிவான புழுவும் இயற்கையும் அவருக்கு காட்டியிருக்கிற திறப்பு தன்மீட்சி வழியாக நமக்கு சாத்தியமாகலாம். தன்மீட்சி ஒரு திறப்பு தான் என கண்டுகொள்ள நான் செயலாற்ற வேண்டும்.
ஸ்ருஷ்டி (நம்மை உருவாக்கிய ஆற்றல்!) ஜெவிடம் கேட்டால் நீ அளித்த எதையும் நான் வீணாக்கவில்லை என அவரால் சொல்ல முடிவதாக குறிப்பிடுகிறார். நானும் அப்படிச் சொல்ல வேண்டும் என விருப்பப்படுகிறேன்.
பிரபாகரன் சண்முகநாதன்



Leave a comment