“ஏன் தொடப்பிடாது? யாரைப் பார்த்தாலும் தொடாத வரையில், சரியாப் பார்க்காதது போல இருக்கு எனக்கு. இவன் என்ன? நான் எல்லோரையும் தான் தொடறேன், தொடப் போறேன்” அம்மணியின் இந்த வார்த்தைகள் தான் மரப்பசு நாவலை முழுவதுமாக தாங்கி நிற்கின்றன.
தொடாத வரையில் சரியாக பார்க்காதது போல இருப்பது தான்- அம்மணி. தன் வாழ்வில் எதிர்படுகிற எல்லோரையும் ஒரு முறையாவது தழுவிவிடத் துடிக்கிறாள். தொட்டால் என்ன நடக்கும்? என்ன வேண்டுமானாலும். ஜட்ஜின் பெண் மனம் விட்டு பேசுவாள். அநேக கோடி ஆண்கள் எல்லாம் அந்த ஒரு தொடுகைக்காக தங்கள் உடல், பொருள், மெய் எல்லாவற்றையும் தந்துவிட்டு துறவறம் கூட செல்ல துணிந்துவிடுவர். கோபாலி அப்படி தான் செய்தார். பட்டாபியும் அப்படி தான். புரூஸ். ஏன் இராப் பகலாக அம்மணியின் அருகில் தங்கள் நேரத்தைத் தொலைத்தவர்கள் எல்லாம் அந்த தொடுகைக்குத் தான் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.
எல்லோருக்கும் அம்மணி வேண்டும். தங்களுக்கு வெளியே. மூன்றாவது யாரோ ஒருத்தியாக. அத்தனை பேரின் கண்களுக்கும் விருப்ப பொருளாக இருக்கும் அம்மணியின் மனதை ஒருவர் எழுதிச் செல்கிறார். அவர் தி.ஜா.
தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவல் இப்படி தொடங்குகிறது, ‘எதை பார்த்தாலும் சிரிப்பு வருகிறது’. முதல் பகடி வரியிலேயே இதுவரைக்குமான பெண்கள் தங்கள் வாழ்வை எப்படி தீர்மானிக்க வேண்டும் என்று இருக்கிற எல்லா உலக வழக்கங்களையும் உதறிவிட்டு ஒருத்தி, எல்லோருக்குமாக வாழப் போகிறாள். அவள் கதைக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் என தி.ஜா. கூட்டிச் செல்வது போல இருக்கிறது. முதல் பாகம் வரைக்கும் எதையும் பட்டுனு தெறிக்குற மாதிரி உடைத்து விடவில்லை அவர். ஏன் இப்படி எழுத்தைச் சுற்றி முறுக்குகிறார்? அம்மணி தன்னை சந்திக்க வருகிற ஆண்கள் எல்லோரிடமும் தான் வாழ்ந்தாள் எனச் சொல்லி விடுவதில் என்ன இவருக்கு குறைந்துவிடப் போகிறது என நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் சொல்லத் தான் செய்தார். ஆனால் தாமதமாக. அம்மணிக்கு இந்த உலகில் உள்ள எல்லா ஆண்களுக்கும் ஒரு நொடியாவது மனைவியாக வாழ்ந்துவிட வேண்டும் என்று ஆசை.
அம்மணி ஒருத்தி தான். இனி தி.ஜா.வே வந்தாலும் அம்மணியைப் எழுதிவிட முடியாது. அம்மணிக்கு முன்னர் அல்லது அவளது ஜாடையில் என்று ‘அம்மா வந்தாளி’ல் வரும் அம்மா, ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாயகி. ஆனால் இவர்கள் எல்லோரும் வேறுவேறானவர்கள். சூழலும் வேறு வேறு. ஆனால் அவர்களின் திடம் என்பது மட்டும் பொது. யாருக்கும் வாய்த்துவிடாத ஒன்று.

அம்மணி சிறிய வயதில் இருந்தே அப்படி தான் என்பதற்கு தி.ஜா. அவளின் பிறந்த ஊருக்கு, வளர்ந்த பெரியம்மா வீட்டுக்கு எல்லாவற்றுக்கும் அழைத்து செல்கிறார். தொட்டால் தான் பார்த்தது போல இருக்கு என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டது போலவே அவள் பள்ளியில் நடந்த சம்பவத்தில் தலைமையாசிரியருக்கே கண்டனம் செய்யும் பெண்ணாக, பேரறிவின் திலகமாக, உலகை இரட்சிக்க வந்த கடவுளாக அம்மணிக்கு வேண்டியதெல்லாம் கிடைத்துவிடுகிறது.
நவீன தாசியாக தன்னை வடித்துக் கொள்கிறாள். அத்தனை அன்போடும் நெருக்கத்தோடும் அழகோடும் பழகும் அம்மணியைக் கோபாலி தன்னுடனே வைத்துக் கொள்கிறார். அவர் யார் வைத்துக் கொள்ள? சரியாக சொல்லப் போனால் அம்மணி தான் அவரையும் அநேக ஆண்களையும் உடன் இருப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பவளாக இருக்கிறாள்.
அம்மணி வெற்றியின் உச்சாணி கொம்பிலேயே இருக்க முடியாது தான். அவளைச் சங்கடப்படுத்தும் நிறைய விஷயங்கள் அரங்கேறுகின்றன. உலக வாழ்வும் அது தானே. வேலைக்காரனுக்கு மனைவியாக வரும் மரகதம். தான் தேடி ஓடிக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும்விட அவள் தன் கணவன் மீது கொண்டுள்ள ஒரே ஒரு பிணைப்பு தன்னை தூக்கி எறிவதைக் கண்டு திகைக்கிறாள். இலண்டனில் சந்திக்கும் புரூஸ் கேட்ட கேள்வி எதற்காக இப்படி அலைகிறாய் என்பது மனதுக்குள் குடைகிறது.
எல்லோருக்கும் போலவே அவளுக்கும் சாய்ந்துக் கொள்ள ஒரு தூண் தேவைப்படுகிறது. எல்லோரும் கொண்டாடும் இந்த அழகெல்லாம் இளமையெல்லாம் பாழான பிறகும் தன்னைத் தாங்கிக் கொள்ளும் ஒரு தூண் தேவையாக இருக்கிறது.
பட்டாபி. அவன் தான் அந்த தூண். தன்னை தோளில் தூக்கி சுமக்கும் ஒருவன். அம்மணி முதல்முறையாக இறங்கி வருகிறாள். அது தான் அவளின் முடிவும்கூட.
அம்மணியை யாருக்குத் தான் பிடிக்காது. அவளை கொண்டாடும் அவளோடு உறவாடும் அவள் நடனத்தில் தங்களையே கரைத்துக் கொள்ளும் ஆண்கள் கூடாரத்தில் அவளுக்கான மரியாதை எது வரைக்கும். எந்த பெண்ணுக்குமான மரியாதை எது வரைக்கும். அழகு, இளமை, வசீகரம் தாண்டி என்ன அடையாளம் இருந்துவிட போகிறது. சாலையில் இறந்து கிடக்கும் பசுவிற்கு தான் என்ன உண்டு அதன் பிறகு. தான் வாழ்நாள் முழுவதும் உழைத்து விட்டு யாருமின்றி மடிந்து விழும் அந்த பசுவிற்கு மரப்பசுவே தேவலை தான்.
உயிருக்கு அணுக்கமான ஒன்றை தேக்கிக் கொள்ள நாமெல்லாம் தேட வேண்டியிருக்கிறது. அந்த அணுக்கம் அன்பாகக்கூட இருக்கலாம். அதன் தேவை அம்மணிக்கு என்று இல்லை. எனக்கும்தான். உங்களுக்கும்தான்.
தி.ஜா.வின் எழுத்து எனக்கு மிக விருப்பமான ஒன்று. செம்பருத்தி, அம்மா வந்தாள், இப்போது மரப்பசு. அசைவில்லாத பகலுக்கு பிறகு வரும் மாலை வேளையின் காற்று எத்தனை பரவசமாக இருக்கும். தி.ஜா வின் எழுத்தும் அப்படியானதுதான்.
பிரபாகரன் சண்முகநாதன்



Leave a comment