நாங்கள் ஈரோட்டில் இருந்து கோவைக்கு வந்துகொண்டிருந்தோம். அமரும்படியான இருக்கைகள் கொண்ட ரயில் அது. எங்களது அருகில் இருந்த கம்பார்ட்மெண்டில் கைக்குழந்தை, சிறுவன் இருவருடன் பெற்றோர் ஏறினர்.
காற்றே உள்ளே வர இயலாதளவுக்கு இருந்தது பெட்டி. இத்தனை பேர் பயணிக்க போதுமான இடைவெளிகள் உடன் இருக்கைகள் இல்லை. ஒரு சோபாவை எதிர் எதிராக பொருத்தியது போலான அமைப்பு. மேலே சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறிகள் சத்தத்தைத் தவிர வேறு எதையும் தரவில்லை.
எங்களுக்கே மூச்சு முட்டுவது போல இருந்தது. குழந்தைகளுக்கு எப்படி இருக்கும். கைக்குழந்தை திடீரென அழத் தொடங்கியது.
அழுதா தானே குழந்தை என முதலில் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அந்த அழுகுரல் நிற்கவே இல்லை. பின் ஒட்டுமொத்த கம்பார்ட்மெண்டின் கவனமும் அந்தக் குழந்தையின் மீது பெற்றோர் மீதும் திரும்பியது.
மூத்த அம்மா ஒருவர் அந்தக் குழந்தையை லாவகமாக தூக்கி தட்டியெல்லாம் பார்த்தார். அந்தக் குழந்தை அவர் கைக்கு போனதும் இன்னும் வீறிட்டது. பெற்றோர் இருவரின் பிரச்னை இப்போது ஒட்டுமொத்த கம்பார்ட்மெண்டின் பிரச்னையாக மாறியதும் ஆளுக்கு ஒரு ஐடியாவுடன், அதனை வெளியில் சொல்லியோ சொல்லாமலோ குழந்தையை நோக்கி திரும்பினர்.
கழிவறைக்கு அருகில் நின்றிருந்த ஆண்களின் கூட்டமும் இதில் இணைந்துக் கொண்டனர். அவர்கள் தங்களுக்குள் சிரித்து பேசி விளையாட இதுவொரு வாய்ப்பு. அந்த ஆண்களில் ஒருவரை மற்றவர்கள் ‘மச்சா நீ போய் தலைவர்போல செஞ்சு காண்பி’ என அனுப்பி வைத்தனர். அவர் அங்கே நின்றபடியே தன் முடியை கைகளால் கோதிவிட்டுக் கொண்டிருந்தார்.
நடுத்தர வயது மனிதர் ஒருவர், பாப்பாவுக்கு இந்த சாக்லேட் கொடு என ஒரு சிறுமியை அழைத்து வந்தார். அந்தச் சிறுமி வீறிட்டு அழும் குழந்தையை தயக்கத்தோடு அணுகி அதற்கு சாக்லேட் கொடுக்க முயற்சித்தது. எதுவும் பலனளிக்கவில்லை.
டாக்டருக்குச் சொல்லலாம் என ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். சிலர் சலித்துக் கொண்டனர்.
அம்மா சமாதனம் செய்தும் அழுகை நிற்கவில்லை. அந்தக் குழந்தையின் அண்ணன் ஏதோ செய்யப் போக அழுகை சத்தம் அதிகமானது. இதனை பார்த்து கோபமான அப்பா, சிறுவனை பளாரென அறைந்தார். இப்போது கம்பார்ட்மெண்டுக்கு இரண்டு குழந்தைகளின் அழுகையை நிறுத்தவேண்டிய கடமை வந்துவிட்டது.
தாய் இருக்கையைப் பார்த்து மறைந்தவாறு பால் புகட்ட முயன்றார். குழந்தை தலையை உலுப்பி உடலை வளைத்து அழுதது. தீராத அழுகை.
தாயிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட அப்பா அதனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு பெட்டியின் குறுக்காக நடக்கத் தொடங்கினார். காற்று சுழற்சி கிடைக்கிற இடமாகப் பார்த்து பெட்டியின் மையப் பகுதிக்குச் சென்றார். அங்கு ஆட்கள் குறைவாக இருந்தனர். விசிறியின் கீழே அவர் குழந்தையை கையில் ஏந்தியவாறு நின்றிருந்தார்.
இயேசுவை கையில் ஏந்திய மரியாள் எனக்கு நினைவுக்கு வந்தாள். ஆண்களில் மரியாள் இருக்கக்கூடாதா என்ன.
குழந்தையின் அழுகைச் சத்தம் கொஞ்சம் தள்ளிச் சென்றதும் அங்கிருந்த மனிதர்களின் பதட்டமும் உடனடியாக செயலாற்ற வேண்டிய அவசியமும் தள்ளிப் போனது. அவரவர் தங்களின் போன்களில் முகம் புதைத்தனர். அழுது அழுது ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தை தூங்கிப் போனது.
ஒரு களேபரமே முடிந்ததுபோல இருந்தது. முதன்முறையாக பார்க்கிறவர்களுக்குத்தான் இது அதிர்ச்சிதரக்கூடியதுபோல. எந்த உணர்ச்சியுமின்றி இந்த களேபரத்துக்கு மத்தியில் டிடிஆர் அமர்ந்திருந்தார்.
இப்படியான சூழல்களை எல்லாம் பார்த்ததாலோ என்னவோ அடல்ட்ஸ்-ஒன்லி விமான சேவைக்கு மேற்கத்திய நாடுகளில் வரவேற்பு இருக்கிறது.
அதன் பிறகு அடுத்த நிறுத்தத்தில் அந்த பெற்றோர் இறங்கினர். தூங்கிக் கொண்டிருக்கிற குழந்தை எழுந்துவிடக்கூடாது என்கிற கவனத்தோடு அவர் குழந்தையை தோளில் ஏந்திக்கொண்டு பைகளை எடுத்துக் கொண்டார்.
வெற்றிடத்தை நிரப்ப எப்போதும் ஒரு சத்தம் தேவைப்படுகிறது. எதிரில் இருந்த பெரியவர் ஒருவர் சத்தமாக ரீல்ஸ் பார்க்கத் தொடங்கினார். அருகில் சிறுவர்கள் சத்தம் போட்டு விளையாடத் தொடங்கினர்.
ரயில் நிலையத்தை அடையும்போது அறிவிப்பு குரல் கேட்டது. ரயிலில் பயணிக்கும்போது செல்பேசியில் சத்தமாக வீடியோக்கள் பார்த்தாலோ சத்தமாக பேசினாலோ ஆயிரம் ரூபாய் அபராதம் என்றது. அந்த அறிவிப்பு முடிந்ததும் கைராசியான சில்க்ஸ் என ஒலிபெருக்கி அலறியது. அந்தச் சத்தம் ரயில் நிறுத்தத்தைக் கடக்கும்வரை கேட்டது.
எது சத்தம் எது சத்தமில்லை என எப்படி முடிவு செய்வார்கள். பயணிகள் மீது கரிசனமாக இருக்கும் ரயில்வே நிர்வாகத்தைப் பார்த்து கண்களில் நீர் சுரந்தது.
சத்தமில்லாது இருப்பது என்பது இங்கு ஆடம்பரமானது. சமூகமாகவே நாம் சமூகமாக நடந்துகொள்வதில் போதாமைகளுடன் இருக்கிறோம் எனத் தோன்றுகிறது. வெற்றிடத்தை நிரப்ப நம்மிடம் இருப்பது சத்தம் மட்டுமே.
பிரபாகரன் சண்முகநாதன்



மறுமொழியொன்றை இடுங்கள்