அசலனம்

நகரத்து வாழ்வு அலைக்கழிப்பானது. உங்களால் ஒரே இடத்தில் வாழ்வைக் காண முடியாது. கண்முன் எரியும் விளக்குகளும் கண்மூடித் திறப்பதற்குள் விரையும் போக்குவரத்தும் யாரென்றே அறியாத மனிதர்களும் அவர்களின் வேகமும் யாரையும் தனித்துவிட்டுவிடும். 

கிராமத்தின் கண்கள் கொண்டு நகரத்துக்கு வருபவர்களின் பார்வையில் முதலில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் பின்னர் அயர்ச்சியும் அடையும். இதனை விளையாட்டுக் களமாகக் காணப் பழகியவர்களுக்கு இந்தப் பசப்புகள் எல்லாம் மறைந்து போகும். அவர்களுக்கு சலனத்தின் ஆட்டமே பிடித்தமாகிவிடும். சலனத்தை விரும்பாதவர்களுக்கு அங்கு இடமில்லை.

சுநீல் கங்கோபாத்தியாயவின் ‘தன் வெளிப்பாடு’ நாவலை வாசித்து முடித்தேன். அவன் மனம் இயல்பான படைப்பு ஊக்கம் கொண்ட கூர்மையான மனம். ஆனால் அவனைச் சுற்றிய வாழ்வும் உலகமும் எப்போதும் அசைந்துக் கொண்டே இருக்கும் இயந்திரம். இந்தப் பின்னணியில் நாவல் உருவாகிறது.

கல்கத்தாவின் தெருக்கள், பேருந்து, டாக்ஸி, மதுபான விடுதிகள், சூதாட்ட இடங்கள், சிவப்பு விளக்குப் பகுதிகள் அத்தனையையும் காண முடிந்தது. சுநீல் எழுதுகிற கல்கத்தா நான் பார்த்திடாத கல்கத்தா இல்லையெனினும் என்னால் அந்த நிலத்தை உருவகித்துப் பார்க்க முடிகிறது.

வங்காளப் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு வங்கத்திலிருந்து கல்கத்தாவுக்கு இடம்பெயர்கிற ஒருவனாக சுநீல் (எழுத்தாளரின் பெயரே நாவலின் கதாபாத்திரத்துக்கும்) நாவலில் வருகிறான். 

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகிற இளைஞன். அலுவலகங்களும் வேடிக்கைகளும் நாள் என்று ஆகிவிட்டபின் அந்தச் சுழலில் இருந்து தப்பிக்கவும் மீண்டும் அந்தச் சுழலுக்குள் போகவும் துடிக்கிற நவீன மனிதன். அவன் எதிர்கொள்ளும் தனிமையைச் சிதைக்க அவன் அறிந்த வழிகளெல்லாம் போராடுகிறான்.

மதுபான விடுதி, சீட்டாட்டம், பொதுமகளிர் என எல்லாமுமாக சுற்றித் திரியவும் அதற்கான நண்பர்களும் செலவிட பணமும் இருப்பதால் நகரத்தின் ராட்டினம் பிடித்தும் இருக்கிறது. ஆனால் அது எளிதில் அலுத்துவிடுகிறது. அறத்தின்பாற் பிறழ்வது சாகசமாகவும் குற்றவுணர்வாகவும் தண்டனையாகவும் மாறிவிடுகிறது.

நிலத்தில் கால் படும்போது அது எதார்த்தத்தை அறிவிக்கிறது. எதார்த்தம் ஏற்க முடியாததாக இருக்கிறது. என்னால் சுநீலை முழுவதாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்தத் தலைமுறையின் தன் உணர்வு கொண்ட எந்த இளைஞனாலும் அவனைப் புரிந்துகொள்ள முடியும்.

இது அத்தனையில் இருந்தும் தன்னை விடுவிக்கும் ஒரு மருந்தாக அவன் காதலைப் பாவிக்கிறான். அந்தக் காதலியிடம் தன் பிறழ்வுகள் அத்தனைக்குமான பாவ மன்னிப்பை வேண்டுகிறான். அவளைப் புனிதப்படுத்துகிறான். அவளின் அருகாமையில் தன்னைக் கரைத்துக் கொள்கிறான். அவளைத் தீண்டாது பூசிக்கிறான். ஆனால் அவள் அருள் அவனுக்குரியது அல்ல.

எங்கிருந்து வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் அதனுள்ளேயே விழும் மாயச் சதுரமாக நகரம் அவனுக்கு மாறுகிறது. அவனை மீண்டும் அது தன்னுள் இழுத்துக் கொள்கிறது.

இந்த நாவலின் இன்னொரு பகுதி பொது மகளிர் வருகிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் எந்தவித அலட்டலும் இல்லாதிருந்த நகரத்தின் சிவப்பு விளக்குப் பகுதி பற்றிய அறிமுகம் இதில் கிடைக்கிறது.

ஊரின் பெரிய மனிதர்கள், ஆர்வமிகு இளைஞர்கள் என அத்தகைய மகளிரின் வீடுகளும் அங்கேயே வாழக் கூடியவர்களும் வருகிறார்கள். அங்கு நடக்கிற ஒரு தாயின் தவிப்பும் அதனோடு சேர்ந்து விளைகிற பிரச்னைகளும் என நாவல் செல்கிறது. காலத்தின் ஒரு அதிர்ச்சிக்குரியது அது. இன்றைக்கு அதனைவிட நுணுக்கங்கள் நிறைந்த சிக்கல்கள் நம்மிடம் உள்ளன. அந்தவொரு பகுதி தவிர்த்து மீதி அத்தனையும் இன்றைக்குமானவை.

எனக்கு இந்த நாவலில் பெண்களைப் பேசியிருக்கிறவிதம் பிடித்திருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு வரி, ‘ஒவ்வொரு பெண்ணும் கபடத்தனத்தின் உருவகம்’. 

தனக்குப் போக்குக் காட்டும் ஒரு பெண் குறித்து சுநீல் இவ்வாறு எண்ணுகிறான். அதே பகுதியில், ‘உண்மையிலேயே எல்லாப் பெண்களும் காளி மாதிரி மனிதத் தலைகளை மாலையாக்கி அணிந்து கொள்ள விரும்புகிறார்களா’ என அவன் கோபம் கொள்கிறான்.

உடலை வேண்டுமானால் பெற முடியும். உடலுக்குரியவளை முழுவதுமாக உணர்ந்துகொண்டதாக அது ஆகிவிடாது. ‘பெண்ணின் உள்ளிருக்கும் பெண்மையை அவள் காண்பிக்காவிட்டால் பார்க்க முடியாது’ என சில நேரடியான அவதானிப்புகள்/ தாக்குதல்கள் வழியாக சுநீலின் மனதினை அறிந்துகொல்ள முடுகிறது.

காயத்ரி, மனீஷா, யமுனா என அவன் உலகில் பெண்கள் வருகிறார்கள். அவன் ஒவ்வொருவருடனும் காதல் கொள்கிறான். அந்தக் காதல்கள் கை கூடுவதில்லை. நாவலில் யமுனா வருகிற பகுதிகள் அத்தனையும் அழகானவை. 

ஒரு புத்தகம் முடித்த பின்னரும் அதன் உலகிலிருந்து வெளியே வர இயலாத மனநிலையைக் கொடுக்க முடிகிற ஒன்று நிச்சயம் இலக்கியமாகத்தான் இருக்க முடியும். வங்க நாவல்கள் மீது ஒரு ப்ரியம் உருவாகி இருக்கிறது.

காதல் நாவல்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேனோ எனத் தோன்றுகிறது. மஞ்சள் வெயிலுக்குப் பிறகு தன்வெளிப்பாடு. அங்கு ஜீவிதா, இங்கு யமுனா. வேறு ஒன்றும் மாறவில்லை.

காதல் கொள்கிற மனம் எங்கிருந்தாலும் ஒன்றுதானே. தமிழ் எழுத்தாளனுக்கும் வங்க எழுத்தாளனுக்கும் காதலில் என்ன வித்யாசம் இருக்கப் போகிறது. 

ஆனால் இரு நாவல்களின் காலமும் நிலமும் வேறு. அதனை நாம் பார்த்தே ஆக வேண்டும். நான் தற்செயலாக அடுத்தடுத்து வாசிக்கிறேன் என்பதைத் தவிர இரண்டையும் ஒப்பிட வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது.

அலைக்கழியும் மனம் கொள்ளும் பற்றுதல் தனிமை. சலனத்தைத் துண்டாடும் தனிமை புறத்தின் அலைக்கழிப்பை மனத்துக்குள் நிகழ்த்திப் பார்க்கிறது. அதனைக் காட்சிப்படுத்தும் நிகழ்வே இந்தக் கதைகள். 

அசலனத்துக்கான தேடலில் சலனத்தை அறியும் சுய அறிதல் முதல் நிலை. தன்வெளிப்பாடு அதனை தொடங்கி வைக்கிறது.

பிரபாகரன் சண்முகநாதன்

Related Posts

  • மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    மொத ராத்திரி ஏன் கொண்டாடப்பட வேண்டிய படம் அல்ல?

    இங்கு காதல் எப்போதும் பேன்டஸியான ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எதார்த்த வாழ்வில் இருந்து காதல் விலக்கிப் பார்க்கப்படும் சூழலில் மொத ராத்திரி போலான படங்கள் மறைமுகமாக இங்கு…

  • புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தரின் கனவு (குறுங்கதை)

    புத்தருக்கு அன்று விநோதமான கனவு வந்தது. எப்போதுமே சலனமின்றி இருக்கும் மனம் அன்றைக்கு மாறாக அலைந்துகொண்டே இருந்தது. அவர் தனது ஆப்பிள் வாட்சில் இதய துடிப்பைச் சோதித்தார்.…

  • கார் புராணம்

    கார் புராணம்

    கார் ஓட்டும்போது இயற்கையாகவே தியானம் நிகழ்வதாக ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அவர் சொல்வதை நான் எனக்குமாகவே எடுத்துக் கொள்கிறேன்.  பதினேழு வயதில் காரை அணுக்கமாக உணர்ந்தேன். அதற்கு…

மறுமொழியொன்றை இடுங்கள்

Discover more from எழுத்தாளர் பிரபாகரன் சண்முகநாதன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading