மாயம் அல்லது கடவுளின் கை

(சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் குறித்து)

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்

வாழ்வு புதிரானது. இயல்பு அல்லது விதி என நாம் அழைக்கிற ஏதோவொன்று உருவாக்குகிற நிஜத்தை காட்டிலும் சிறந்த ஒரு புனைவை எழுதவே படைப்பாளிகள் விழைகிறார்கள். நிஜத்தில் நிகழும் புனைவு என்பது புனைவின் புனைவைவிட மாயம் நிறைந்ததாக கற்பனைக்கு எதிரானதாக அமைவதை நம்மால் பார்க்க முடிகிறது. இயல்பு இவ்வாறு இருக்கும்போது படைப்புகளில் தர்க்கத்தை உருவாக்குகிற, எதார்த்த படைப்பு மனநிலைக்கு எதிரானதாக, ஆனால் அதன் கூறுகளை கவர்ந்துகொள்ளக்கூடிய கதை சொல்லல் பின்னணியில் வருகிற முக்கியமான எழுத்தாளராக சுரேஷ்குமார இந்திரஜித்தை குறிப்பிட முடியும்.

மைக்ரோ பிக்‌ஷன், ஃப்ளாஷ் பிக்‌ஷன் எனச் சொல்லப்படுகிற சிறுகதைக்குள் அடங்க கூடிய ஆனால் சிறுகதையிலிருந்து வேறான வடிவத்தை கொண்ட கதைகளை எழுதிப் பார்ப்பதில் உலகம் முழுவதுமே ஒரு நாட்டம் இருப்பத்தை அறிய முடிகிறது. தமிழுக்கு மேலை எழுத்துகளின் மீது உருவாகும் பிம்பத்தின் வரலாறு என்பது சிறுகதைகளின் தோற்றம் முதலே தொடங்குவதை நாம் பார்க்கலாம்.

மைக்ரோ பிக்‌ஷனுக்கான இலக்கணமென தனியாக எதுவும் வரையறுக்க இயலாதபோது வார்த்தை அளவில் (சில சமயங்களில் ஒரு குறும் சிறுகதையின் அளவுக்கு இவை சென்றுவிட்டாலும்) அல்லாது கதை சொல்லப்படக்கூடிய உள்ளடக்கத்தின் வழியாக தன்னை நிறுவிக் கொள்ள முயல்கின்றன.

சுரேஷ்குமார இந்திரஜித் படைப்புலகம் குறித்த அறிமுகம் அவரது சிறுகதைகள் வழியாக பெற முடியும். தற்செயல்கள், சமூக வரலாற்று பின்புலம், கலாச்சார நெறிமுறை மீறல், அதன் மீதான பகடி இவற்றின் பின்னணியில் எழுந்து நிற்கும் கதைகள் பெரிதாக நிலம், மெல்லுணர்வு சாராத குறைத்து சொல்லப்படும் வரையறையில் கதையாக எழும் மாயத்தை காண முடியும்.

குறுங்கதைகள் வாசிப்பதற்கு முன்பு அவரது சிறுகதைகளை வாசித்தேன். பின்நவீனத்துவாதியின் மனைவி கதைத் தொகுப்பு எனக்கு அறிமுகப்படுத்திய உலகத்தில் இருந்து சுரேஷ்குமார இந்திரஜித்தை அணுகத் தொடங்கினேன்.

அவரது கதைகளில் ஒன்றான ‘கால்பந்தும் அவளும்’ என்கிற சிறுகதையில் தன்னிடம் அலுவலக உதவியாளராக வேலை பார்த்த ஒருவரின் மகனை பிற்பாடு தற்செயலாக மருத்துவமனையில் பார்ப்பவர் அந்த இளைஞரின் பெற்றோரை நினைவுகூர்கிறார். அந்த பையனின் தாயார் ஒரு ஆங்கிலோ இந்தியர். தந்தையின் கால்பந்தாட்டத்தை பார்த்து அந்த பெண் அவரை காதலித்த கதையை கதைசொல்லி நினைவுகூர்கிறார்.

தந்தைக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. இருந்தபோதும் அவரது கால்பந்தாட்டத்தை பார்த்து காதலியாகிக் கொள்கிறாள் ஆங்கிலோ இந்தியப் பெண். அவர்களது வீட்டுக்கு போகும்போது படுக்கையில் இரண்டு கால்பந்துகள் இருப்பதை கதைசொல்லி பார்க்கிறார். இறுதியாக ஆங்கிலோ இந்திய பெண்ணின் புகைப்படத்தை அவரது மகன் கதைசொல்லியிடம் காட்டும்போது அந்த பெண் கால்பந்தை கட்டிக்கொண்டு இருப்பது கதையின் உச்ச நிகழ்வாக அமையும். இந்த கதையில் உருவாகியுள்ள புதிர்தான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலக வசீகரத்துக்கு உதாரணம்.

நிகழ்வுகளை கட்டடத்தின் சுவர் போல எழுப்ப ஒவ்வொன்றாக அடுக்கும் எழுத்தாளர் சில இடங்களில் செங்கற்களை அடுக்குவதில்லை. நாம் பின் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்போது நம்மையும் அறியாமல் நம் மனம் விடுபட்ட இடங்களில் இடம்பெற வேண்டிய செங்கற்களுக்கான இடைவெளிகளில் இட்டு நிரப்பிக் கொள்கிறோம். இந்த மாய விதியின் வழியாக அவர் அடுக்கிக் கொண்டே செல்வதை குறுங்கதைகளில் பார்க்க முடியும்.

இந்த குறுங்கதைகள் பெரும்பாலும் இயல்புவாத விதிகளுக்கு அப்பாற்பட்டதாக ஆனால் இயற்கைக்கு அப்பால் இல்லாத கதையாக இருக்கின்றன.

மனிதர்களின் உணர்வுநிலைகளான காதல், காமம், கோபம், வெறுப்பு, சலிப்பு இவற்றின்மீது அங்கதத்தோடு நிகழ்வினை கட்டமைக்கப்படுகிற கதைகளாக இவை உள்ளன. இந்த கதைகள் எதிலும், நாம் நிலம் – கலாச்சாரம்- பொருளியல் சார்ந்த அடையாளங்களை பெற முடிவதில்லை. அதனாலேயே இது ஒருபரப்புக்குள் நில்லாமல் மேலெழுந்து வருகிறது.

வெளிவந்துள்ள இரண்டு குறுங்கதைகள் தொகுப்புகள்: தாரிணியின் சொற்கள் மற்றும் பின்னணிப் பாடகர். பின்னணிப் பாடகர் முதலாவதாகவும் தாரிணியின் சொற்கள் இரண்டாவதாகவும் வெளிவந்திருக்கின்றன. இதன் காலத்தை கதைகளை வாசிக்கும்போதே புரிந்துக்கொள்ள முடிகிறது. தாரிணியின் சொற்கள் நூலில் அளவில் சிறியதான கதைகளும் பல்வேறு திறப்புகள் கொண்டதாக அவற்றின் வடிவமும் இருக்கிறது. இந்த புனைவு சாத்தியம் இன்னும் கூர்மையாகி நம்மை இன்னும் தெளிவாக சூழலுக்குள் இருத்தும் கதைகளாக தாரிணியின் சொற்களில் உள்ளவை அமைகின்றன.

ஆண்- பெண் உறவு சார்ந்த கதைகள் நிரம்பி நிற்கின்றன. இவை வரையறுக்குட்பட்ட கதைகள். எல்லையென்று தீர்மானிக்கப்படுவதில்லை. காதல் மீதான பகடியும் வரையறை இல்லாத காமத்தின் மீதான ஆவலும் பாத்திரங்களுக்கு நீள்கிறது.

பின்னணிப் பாடகர் தொகுப்பில் உள்ள வசந்தா என்கிற கதை இப்படி ஆரம்பிக்கிறது, ‘மனைவிகளுக்கு என்று ஒரு அழகுண்டு. அதாவது பிறன் மனைவிகளுக்கு’ அந்த கதையில் இருவர் சந்திக்கிறார்கள். இருவருக்கும் ஏற்கெனவே வேறு திருமண உறவு உண்டு. தனது மனைவி தெரிவதாக காதலனும் அவ்வவ்போது தனது கணவன் தெரிவதாக காதலியும் சொல்லிக்கொள்கிறார்கள். இந்திய உளவியல் அப்படித்தானே யோசிக்கும் என்கிறார் எழுத்தாளர்.

இந்த உளவியல் குளத்தில் கல்லெறியும் குறுங்கதைகள் பட்டியலில் தாரிணியின் சொற்கள் தொகுப்பின் கதைகளில் ஒன்று: படுத்த படுக்கையில் இருக்கும் கணவனிடம் பால் கொண்டுசெல்லும் மனைவியின் காதில் கணவன் சொல்கிற வசனம், அந்த கதையை தலைகீழாக்குகிறது. வேலாயுதம் என்பவருக்கு ஏதேதோ நினைவுகள் தொடர்பில்லாது வருகின்றன. தான் சங்கீதா என்கிற பெண்ணுடன் உறவு கொண்ட காட்சிகள் இப்படியாக பலவும் வந்துகொண்டே இருக்கின்றன. வேலாயுதம் இவற்றையெல்லாம் அசைபோட்டுக்கொண்டே இருக்கும்போது அவரது மனைவி பால் ஊற்ற வருகிறாள். வேலாயுதம், நான் யார்னு உனக்குத் தெரியாது என்கிறார். அவள் மனைவி பால் டம்ளரை கீழே அனிச்சையாக வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவாள். படுக்கையில் இருக்கும்போதும் ஒரு ஆணின் அதிகாரத்தையும் கடந்த காலத்தில் அவன் என்னவாக இருந்தான் என்பதையும் மனைவிக்கு கடத்துகிற ஒரு நொடியை குறிக்கும் அந்த வசனம் திகைக்க செய்கிறது. அந்த வார்த்தைகளின் கூர்மை இந்த கதையை நிறுத்துவதாக படுகிறது.

காதலின் புனிதத்தன்மையை கேள்விக்குட்படுத்துகிற கதைகளையும் இந்த எல்லைகளை உடைக்கிற கதையாக எடுத்துக்கொள்ளலாம். முட்டாள் காதலனை பொய் சொல்லிக் கழட்டி விடுகிறவள், காதலன் கருத்தாக பேசி அறுத்து தள்ள பொய்யான, தனது ’காமத்தில் ஈடுபாடற்ற’ முகத்தை காட்டுவதை தொடர விரும்பாத காதலி, தனக்காக உயிரை விடுவதற்கு தயாராக இருக்கும் காதலனை உயிரை விடச் செய்ய குளத்திற்குள் குதிப்பவள் இப்படி. இதுவொரு விளையாட்டு. காதலின் புனிதங்களை பகடி செய்யும் கதைகளாக பார்க்க முடியும்.

பெரும்பாலும் ஆண்- பென் உறவுகள் சிக்கலானவை. யாருடன் யார் இருக்க முடியும் என்பது பற்றி என்ன சொல்ல முடியும். தனது முதல் கணவனுடன் பிரச்னையில் இன்னொருவரை கல்யாணம் செய்துக்கொள்கிற பெண் காதலனின் ஆஸ்தியாலேயே தன்னையும் பிள்ளைகளையும் அவனுக்குமான ஒரு குழந்தையையும் பெற்றுக்கொடுத்து காத்துக் கொள்ள முடிகிறவளாக மாறுகிறாள்- முந்தைய கணவன் இறக்கிற நாளில் அதனை கொண்டாடுகிறாள். எத்தனை அத்துமீறலான தன்மையாக இது படுகிறது. ஆனால் அதுதானே இயற்கை. இந்த தாலி- கலாச்சார வரம்பு என்பதெல்லாம் எதற்கு என்கிற கேள்வியும் இந்த மனிதர்கள் விதித்துக்கொண்ட விதிகளுக்கு அப்பாற்பட்டதான மனித அடிப்படை உணர்வின் விழைவும் எனத் தோன்றுகிறது. அதனை எழுதுவதே ஒரு படைப்பாளனின் வேலை.

தனக்கும் காதலிக்கும் பிறந்த பிள்ளையை பார்க்க செல்கிற பணியாளர் ஒருவர் அதன் முதல்கட்டத்திலேயே திரும்புகிற கதை என இந்த விளையாட்டுகளின் புள்ளிகளை மாற்றி மாற்றி இடுவதன் மூலம் வேறு வேறான கோலங்களை எழுத்தாளர் புனைகிறார்.

முதுமையும் முதுமைக்குப் பிறகான சூழலின் அணுகுமுறையையும் சில கதைகள் பேசுகின்றன.

தயிர் பாக்கெட் என்கிற கதை எனக்குத் தெரிந்து தமிழில் எழுதப்பட்ட பிரமாதமான குறுங்கதைகளில் ஒன்று. மருமகள் மாமனாரிடம் தயிர் பாக்கெட் வாங்கி வரச் சொல்கிறாள். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் 10 ரூபாய் தயிர் பாக்கெட்டினை அவள் கேட்டு விடுகிறாள். கடையில் அந்த நிறுவனத்தின் 20 ரூபாய் டப்பாவும் மற்றொரு நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டும் இருக்கிறது. எதனை தேர்வு செய்வது எனக் குழம்பியவர் 20 ரூபாய் டப்பா எடுக்கிறார். வருகிற வழியில் இன்னொரு கடையில் அவள் கேட்ட அதே பாக்கெட் இருக்கிறது என வாங்கிக் கொள்கிறார். இப்போது கூடுதலாக இருப்பதை என்ன செய்ய என யோசிப்பவர் அதை குடித்துவிடுகிறார். அவரது சட்டையில் தயிரின் துளிகள் ஓட்டியிருக்கின்றன. வீட்டில் மருமகள் இதனை கேட்கும்போது மோர் வாங்கிக் குடித்ததாக சொல்கிறார். ஆனால் அந்த ரசீதை எடுக்க மறந்துவிடுகிறார். இதனைபின் உணர்ந்து வருந்துகிறார்.

முதுமையினால் ஏற்படுகிற நினைவு குறைபாடுகள், முதியவர்களிடம் அடுத்த தலைமுறை வீட்டு நபர்கள் நடந்து கொள்ளும் முறை என.. பிரசார தொனியின்றி கதையின் வழியாகவே ஒன்றை நிலை நிறுத்துவதை எழுத்தாளர் செய்கிறார்.

தனிமை, பறவை (தொகுப்பிலேயே அரிதாக தென்படுகிற இயற்கை படிமம் இந்த கதைக்கு உண்டு), தன்னை கவனித்துக்கொள்ளும் மனைவி உயிருடன் இருக்க வேண்டும் என விரும்புகிற கணவனின் கதை… இப்படி முதுமை குறித்து பேசும் கதைகள்.

மூன்றாவதாக நடிகைகள்/ பெண்கள் பற்றிய கதைகள். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் வரும் பெண்களுக்கு தனித்துவம் உண்டு. அதுவும் அவர்கள் ஆண்களின் குரல்கள் வழியாகவே அடையாளம் காட்டப்படுகிறார்கள். நடிகைகள் குறித்த உரையாடல், நடிகைகளுடனான உறவுகள் இவற்றை பேசும் கதைகள் உண்டு.

பட தயாரிப்பாளரை சந்திக்கவரும் இயக்குநராக விருப்பப்படும் பெண்ணை கதாநாயகியாக மாற்றும் மஞ்சள்நிற அழகி கதையில் அவர் அவளை அடைய முயற்சிக்காததன் பலனாக அவளுக்கு ஆஸ்தான வழிக்காட்டியாக மாறுவார்.

சிவாஜி கணேசனுக்கு உஷா நந்தினி பொருத்தமாக இருக்கும் என்கிற கதை, மதுக் கூடத்தில் மதுவருந்தும்போது கதாநாயகி வாய்ப்பு கேட்டு வரும் பெண்ணுக்கு நீ வராமல் இருந்தால் இந்த கதையில் மாயம் நிகழும். நீ அப்படி வராது சென்றுவிடு எனச் சொல்கிற கதை.. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மச்சம் என்கிற கதையில் மச்சம் வைத்துக்கொள்கிற பெண் தனக்குப் பிடித்த செயலான மச்சம் வைத்துக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறாள். அதனால் கணவனின் சமநிலை குலைகிறது. அவனுக்கு எரிச்சலாக இருக்கும். ஏன் என்கிற காரணம் கதையில் சொல்லப்படாது. ஒரு கட்டத்தில் மச்சம் இருப்பதுக்கு அவனும் மச்சம் இல்லாது போவதுக்கு அவளும் ஒத்துப்போவார்கள்.

இதே போலான கணவன் – மனைவி இடையேயான உறவு குறித்த சூழ்நிலைகள் வரும் கதைகளில் ஒரு விநோதமான ஊடுபாவு இருவரையும் ஒன்றிணைக்கும். ஹனிமூன் சிறந்த கதை. அறிவுஜீவியான கணவன் வாசிக்கிற எந்த புத்தகமும் மனைவிக்கு பிடிக்காது. ஆயினும் இருவரையும் காமம் ஒன்றிணைக்கும்.

மற்றொரு புனைவுக் கதையில் சண்டையிடும் கணவன் – மனைவி இருவரும் கண்ணாடியில் உள்ள புறவுலகில் சண்டையிடச் செல்வார்கள். யாருக்கு குரல் வளம் அதிகமாக இருக்கிறதோ அவர் சண்டையில் வெற்றி பெறுவார். மனைவி கழிவறைக்கு செல்லும்போது அங்கிருந்து தப்பிப் போகும் கணவன் கண்ணாடி உலகில் கொடுக்கப்படும் அறிவுரைக்கேற்ப குளிக்கச் செல்வான், சூடை தணித்துக்கொள்ள. இந்த அங்கதம் கதையை ஒரு படி மேலே உயர்த்துகிறது.

வரையாத படம் கதையில் ஒருவர் விரும்புவது போல ஒருவர் மாறுவார்கள். அதற்கு காரணமாக ஒரு டைரியில் வரையப்படும் ஓவியம் இருக்கும்.

இந்த கதைகளில் உறைகிற மாயத்தினால் மட்டும் கதை நின்றுவிடுமா எனக் கேட்டால் இல்லை. அதற்கு மேலதிகமான நம்மோடு உறவாடும் ஒரு மொழியும் வர்ணனையும் உறவும் தேவைப்படுகிறது.

இந்த கதைகள் பின்னப்படும் வடிவமைப்பு எளிதாக தோன்றினாலும் அது சிக்கலானது. அடுத்து அடுத்து சரியான இடைவெளியில் அடுக்கி தள்ளி விடப்படும் கார்டுகளில் ஒன்று இடம் மாறியிருந்தாலும் அது அங்கேயே நின்றுவிடும் டோமினோ விளையாட்டு போல கவனமாக கதை பின்னப்படுவதை பார்க்க முடிகிறது.

சில கதைகள் கடவுளின் உரிமையையும் எடுத்துக்கொள்கின்றன. ஹேப்பிலி எவர் அப்டர் என்று சொல்வதுபோல அவர்கள் நன்றாக தான் இருக்கிறார்கள். நீங்கள் யோசிப்பதற்கு மாறாக எனச் சொல்கிற கடவுளின் குரலாக கதைகள் உள்ளன.

ஜெயகாந்தனின் அக்கினி பிரவேசம் போலான ஒரு கதை. இளம்பெண்ணை  ஏற்றிவரும் காரில் கார் ஓட்டுபவனுக்கு பணிகிற அந்த பெண் அதன் பிறகு வசதியான வீட்டில் வாழ்வது போலான கதை ஒன்றுள்ளது. தனது மகனுக்கு இவள் சரிப்பட்டு வரமாட்டாள் எனக் கருதுகிற தாய் பின்னர் அவன் காதலித்த பெண்ணை சந்தோசமாக வைத்துக்கொள்கிற கதை உண்டு. இப்படி மாறான முடிவுகளையும் எதிர்பாராத ஒன்றையும் செய்வதன் வழியாக கதைகள் தன்னை இழக்காமல் இருப்பதை பார்க்க முடியும்.

வேடிக்கையான கதைகளும் உண்டு. பெண்ணியப் புலி- ஆணாதிக்க சிங்கம் இந்த உவமானங்களுடன் நடக்கிற சண்டையை சொல்லும் கதை. தாரிணியின் சொற்கள் என்கிற கதை புதிரான கதை.

வாழ்க்கை முழுவதும் அவநம்பிக்கையோடு இருக்கும் ஒருவன் குற்றத்தில் ஈடுபட போகும்போது கதைக்குள் எழுகிற எழுத்தாளரின் கை போல குறுங்கதையின் உருவாக்கத்தில் பங்கு வகிக்கும் மாயத்தை எழுத ஒரு கை கூடுதலாக தேவைப்படுகிறது. அந்த கை சில விஷயங்களை செய்கிறது. அது அந்த கதையை வசீகரமானதாக்குகிறது. புதிர், வேடிக்கை, புனைவு, தற்செயல் என இந்த கலைத்து ஆடும் ஆட்டத்தில் செயல்படும் ஆற்றலை மாயம் என்றும் கடவுளின் கை என்றும் சொல்லலாம்.

பிரபாகரன் சண்முகநாதன்

Leave a comment