மருள்- வாசகப் பார்வைகள்

மருள் சிறுகதை தொகுப்பு குறித்து வாசகர்கள், நண்பர்களின் கடிதங்கள்

அன்புள்ள பிரபாகரன்,

உங்கள் மருள் சிறுகதைத் தொகுப்பு வாசித்து முடித்துள்ளேன். தொகுப்பை முன்வைத்து எழுதுவதற்கு முன் ஓரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 2023 ஜூலை 7 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒருங்கிணைத்த ஆலயக்கலை வெள்ளிமலை வகுப்பிற்கு அந்தியூரிலிருந்து ஒன்றாக சென்றோம். கோவை அரசு மருத்துவர் வேலு சார், அவரது வண்டியில் நம்மை ஏற்றிக்கொண்டார். அதற்கு முன்பும் பல முறை நாம் சந்தித்து இருக்கிறோம். அப்போதெல்லாம் கேட்காதக் கேள்வியை அந்த வெள்ளிமலை பயணத்தின் போது கேட்டேன்.

“பிரபா, என்ன வேலை பாக்குற?”

“writer”

கொஞ்சம் நான் அமைதியானேன். டாக்டரும் எதுவும் பேசவில்லை. நீ எங்கள் அமைதியைப் புரிந்துகொண்டு,

“வடிவேல்….. லக்ஷ்மி சரவணக்குமார் சொல்லுவார் ‘இரண்டாயிரம் வருட தமிழ் நம்மை வாழ வைக்கும்’னு… அதை நான் தீர்க்கமா நம்புறேன். எழுத்தை வாழ்வெனக் கொள்வதில் நம்பிக்கை இருக்கிறது வடிவேல். எழுத்து என்னைக் கைவிடாது “

உன்னிடம் இருந்து அன்று எதிர்கொண்ட வார்த்தைகள் ரொம்ப காலமா என்னுடன் இருக்கிறது. இதோ ஒரு சிறுகதைத் தொகுப்புடன் எழுந்திருக்கிறாய். சந்தோசமாக இருக்கிறது பிரபா.

“சகல நிலமும் எழுதப்பட்டுவிட்டது. எல்லா குரல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டது” என்கிற வார்த்தைகள் கேட்கிற திசை நோக்கி எழுத்தாளன் எப்போதும் புதிய களத்துடன் மேலெழுந்துகொண்டே இருக்கிறான். இரண்டாயிரம் வருடத்து தமிழுக்கு தன் தசையை அரிந்து அரிந்து உணவளிக்கிறான். அது ஒரு உன்னத நிலை. அந்த வரிசைக்கு நீ வந்து சேர்ந்திருக்கிறாய். வாழ்த்துகள்.

அப்பா…. என்கிற மையத்தில் உனக்கு ஆழமான அனுபவம் இருக்கிறது என்று நினைக்கிறேன். பெரும்பாலான கதைகளில் அப்பா ஒரு மெல்லிய கீறல் போல நிகழ்கிறார். அசரீரி, வெகுதொலைவில் உலகம், யாதுமானவன், இழப்பு, மருள், அப்பா வீட்டில் இல்லை என்கிற வரிசையில் ‘அப்பா’ தொகுப்பு முழுவதும் பயணிக்கிறார். அந்த அனுபவத்தை இளங்கோ கிருஷ்ணனின் வரிகளோடு சேர்த்துப் பார்த்தேன்.

“துக்க வீட்டில்

ஒவ்வொருவராய்

எழுந்து செல்கிறார்கள்

துக்க வீடும் இறுதியாய்

எழுந்து சென்றது

துக்கம் எழுந்து செல்லும் வரை

காத்திருக்கிறான் புத்தன்”

(வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பு, யாவரும் வெளியீடு)

அப்பா எழுந்து சென்ற பிறகும் காத்திருக்கிற ஒரு நிலை இருக்கு இல்லையா… அந்த இடத்தில் ஓர் அனுபவம் உண்டு… அந்த வகையில் உன்னோட புனைவை நான் அனைத்துக் கொள்கிறேன். ‘அசரீரி’ கதை அப்பா வரிசையில் முதன்மை கதையாக நான் கருதுகிறேன்.

‘பின் மதிய நேரத்து சூரியனின் காதல் நாடகம்’ கதை தொகுப்பின் முக்கிய கதைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்கிறேன். மருள் கதையின் சித்தரிப்புகள் நன்றாக இருந்தது. ‘இலட்சத்தில் ஒரு காதல் கதை’யில் இழையோடும் நகைச்சுவை உன்னோட எழுத்துக்கு அணி சேர்க்கும் ஒன்றாக வளர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. நகைச்சுவை என்றதும் நினைவுக்கு வருகிறது…. கம்யூனிசவாதிகளின் புரட்சி பற்றிய கனவை ஒரு கதையில் இழுத்திருக்கிறாய். எதற்கு வம்பு…? குறிப்பிட்டேன் அவ்வளவு தான். மற்றவை உன் பாடு. உன் பத்து லட்சம்….

நிறைய இடங்களை வெறுமனே எழுதிப்பார்ப்பது போல இருக்கிறது. நின்றெடுக்கிலே முழுமையாக சொல்லாமல் கடந்து செல்வது போல இருக்கிறது. பொறுமையாக கதையை வளர்த்தெடுக்க கவனம் செலுத்துங்கள் பிரபா.

தொகுப்பை வெளியிட்ட யாவரும் பதிப்பகத்திற்கு நன்றியை சொல்ல விரும்புகிறேன்.

மனம் நிறைந்த வாழ்த்துகள் பிரபாகரன்.

வடிவேல், பா.செ.

மற்றொரு கடிதம்

அப்பா அன்று தான் இறந்தார்.அதற்கு முன்பும் இருக்கலாம்.நினைவுகள் மங்கிவிடும் சாபத்துடன்தான் பிறக்கின்றன.அவற்றால் நாம் தொலைத்தவற்றுக்கு மிகச் சமீபத்தில் நம்மைக் கொண்டுவிட முடியும்.நாம்தான் நம்முடையவற்றைக் கண்டறிய வேண்டும்.

– பிரபாகரன் சண்முகநாதன் ( அ-சரீரி) 💜

இந்தத் தொகுப்பில் அப்பாவை மையப்படுத்தின கதைகள் எல்லாமே அசரீரி, இழப்பு , அப்பா வீட்டில் இல்லை ஒருவித அதிர்வை உண்டாக்குபவையாக உள்ளன..பால்யத்தின் படியில் அப்பாவின் கைபிடித்து நடந்தவன் “அப்பா வீட்டில் இல்லை ” என உணரும் தருணம் விளையாட்டாக இருந்தாலும் , கனமான உணர்வைக் கடத்துவதாக இருந்தது..நகைச்சுவை இழையோடிய இலட்சத்தில் ஒரு காதல்கதையும் , அழகியலோடு பின்மதிய நேரத்துச் சூரியனின் காதல் நாடகம் கதையும், எல்லா உணர்வுகளையும் வெளிக்கொணரும் வகையில் கதைகள் அமைந்திருந்தது ..

அதிக விவரிப்போடு கதைகளை கொண்டு செல்லாதது ஒருவகையில் கதைகளுக்கு போதுமானதாக இருப்பதாகவே தோன்றுகிறது..வாசிக்க ஏதுவான வரிகளோடு, சூழலுக்கு தேவையான விவரிப்போடும் முதல் சிறுகதை தொகுப்பை நிறைவாய் தந்திருக்கிறார் எழுத்தாளர்.

வாழ்த்துகள் பிரபாகரன் சண்முகநாதன்!

-கோமளா கூரிசாத்தனார்

Leave a comment