“நான்”

இலக்கியம் மீதான தீராக் காதல் கூட்டிச் செல்லும் இடத்துக்கெல்லாம் கூடவே போவது என்றிருக்கிறேன்

ஜூலை 16, 1999- சிவகங்கை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் கருவேல மரங்கள் நிறைந்த கண்மாயின் ஒரு பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையம் அதிகாலையில் எந்த சத்தமுமின்றி நிசப்தமாக இருந்தது. மருத்துவனையின் வாசலில் ஒருவர் போர்வையுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

உள்ளே பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தார் ஒரு பெண். கொஞ்ச நேரத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு அலறல் சத்தம் கேட்டது. வேறு யாருமில்லை பிறந்தது நான்தான்.

வெளியே தூங்கிக் கொண்டிருந்தது என் அப்பா. உள்ளே வலியில் துடித்தது அம்மா. வரதட்சணை கொடுக்காமல் கட்டிக் கொள்கிறேன் என்று சொன்னதாலும் அப்பா பார்க்க சிவப்பா உயரமா மீசை வச்சுக்காமல் இருந்தது பிடித்துப் போனதாலும் சரி என்றிருக்கிறாள். அதன் விளைவாகத்தான் இதெல்லாம்.

என் பெயர் பிரபாகரன் சண்முகநாதன். என்னை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இல்லையெனில், எனது எழுத்தின் வழியாக இங்கு அறிந்து கொள்வீர்கள். 

அப்பா அந்தக் காலத்திலேயே கண்ணாடி அணியக்கூடியவராக இருந்தார். ஆகவே எனக்கும் 10 வயதில் அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கண்ணாடி வாங்கிக் கொடுத்தனர். 

கண்ணாடி அணிந்து ஓடக் கூடாது, ஆடக் கூடாது, விளையாடக் கூடாது என்று இருந்தது. கண்ணாடி அணியவில்லையெனில் விளையாட முடியாது. ஆடி ஓட ஆரம்பிக்கும் முன்பே என்னை வீட்டில் இருக்கச் செய்தது இந்தக் காரணம்.

அப்பா புத்தகம் வாசிப்பார். அதனால் வீடெங்கும் புத்தகங்களாக இருக்கும். அப்போது எனக்கு நண்பர்களானார்கள், வெவ்வேறு நிறங்களையும் படங்களையும் முகப்பில் தாங்கி ஏராளமான எழுத்துகளை அகத்தில் கொண்டிருந்த புத்தகங்கள்.

எனது பள்ளி பருவத்தில் பெரும்பாலும் நினைவிருப்பது அவ்வவ்போது என்ன புத்தகங்கள் வாசித்தேன் என்பதுதான். ஆயிஷா நடராஜன், மருதன், சொக்கன் இப்படியான எழுத்தாளர்களை அப்போது அறிந்து கொண்டேன். 

தீவிர இலக்கியத்திற்கு எனது 17ஆவது வயதில் வந்து சேர்ந்தேன். அதற்கு முன்பே புத்தகங்கள் வாசித்திருப்பினும் இலக்கியம் என அர்த்தப்படும் அளவுக்கான வாசிப்பு தொடங்கியது அப்போது இருந்துதான்.

வாசிப்புக்கு பின் இப்படி ஒரு கதை இருக்குமானால் எழுத்துக்கு பின் உள்ள கதையும் அப்போதே தொடங்கிவிட்டது.

தினந்தந்தியில், கோகுலத்தில் சிறிய சிறிய புதிர்கள், பொது அறிவு துணுக்குகள் அனுப்பினால் உங்கள் பெயரில் அவற்றை பதிப்பிப்பார்கள். அதே பொது அறிவு புதிர்கள்- உதாரணத்திற்கு கரப்பான்பூச்சி ரத்தம் வெள்ளை- ஓராயிரம் முறை அதே பேப்பரில் வெளியாகியிருக்கும். ஆனாலும் நாம் அனுப்பும்போது அவர்கள் பதிப்பிப்பதற்கான காரணம் அவர்களின் குட்டி வாசகர்களை தக்க வைத்துக்கொள்ளவும் பெற்றோர்கள் அந்தப் பெயரை பார்த்து சந்தோஷப்பட்டு தொடர்ச்சியாக வாங்கிக் கொடுக்கவும் செய்யும் ஒரு உத்தி. இதெல்லாம் பின்னாடி தெரிந்துக் கொண்டது.

அப்படி எழுத ஆரம்பித்தது ஒரு நாள் பள்ளியில் இரண்டாம் தாளுக்கான தேர்வில் கவிதை எழுதும் பயிற்சிக்கு ஒரு கவிதை எழுதுவதில் வந்து நின்றது. அன்றைக்கு வானவில்லை இராணுவ வீரர்களுடன் ஒப்பிட்டு ஒரு கவிதை எழுதினேன் என நினைக்கிறேன். என் ஆசிரியர் என்னைப் புகழ்ந்து தள்ளினர். அன்றைக்கு வீட்டுக்குத் திரும்பும்போது வானத்தில் மிதப்பதுபோல இருந்தது.

இப்படி சின்ன சின்ன முயற்சிகளுக்குப் பிறகு கல்லூரியில் விகடன் மாணவ பத்திரிக்கையாளராக தேர்வானது எனது எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமானது என நினைக்கிறேன். 

எழுத்தை சீரமைக்க வாசிப்பவர்களுக்கு ஏற்றதுபோல எழுத, வெளிநபர்களுடன் பேச என நிறைய கற்றுக்கொண்டேன். விகடனில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் பள்ளி, கல்லூரி நண்பர்களைவிட மிக நெருக்கமாக இப்போதும் உள்ளனர்.

இப்படியாக ஒன்றிரண்டு ஊடகங்கள் மாறி நான்கு ஐந்து நகரங்கள் மாறி இறுதியாக கோவைக்கு பள்ளிகளுக்கான ஒரு தன்னார்வ அறக்கட்டளையில் பணியாற்றும் நிலையை வந்தடைந்துள்ளேன்.

2024 சென்னை புத்தகத் திருவிழா எனக்கு மிக முக்கியமானது. அதை பற்றி விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு அங்கு நடந்தது மட்டும். எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மருள்’ யாவரும் பதிப்பக வெளியீடாக வெளியானது.

இந்தத் தளம் எனது தனிப்பட்ட வாசிப்பு, அனுபவம் சார்ந்த எழுத்துகளுக்கானது. இங்கு கதைகள், கட்டுரைகள், தொடர்கள், புலம்பல்களை எழுத உள்ளேன். நீங்கள் என்னை, நான் எழுதுவதை, நான் பார்க்கும் கோணத்தை அறிந்துக் கொள்ளலாம்.

இந்தத் தளத்தை சுவாரசியமாக மாற்ற நான் முழுக்க முயற்சி செய்வேன். இலக்கியம் சுவாரசியமானது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

இலக்கியம் மீதான தீராக் காதல் கூட்டிச் செல்லும் இடத்துக்கெல்லாம் கூடவே போவது என்றிருக்கிறேன். உடன் வர உங்களையும் அழைக்கிறேன். இணைந்திருப்போம்.

தமிழ் விக்கி பக்கம்

Leave a comment