அலெக்ஸாவும் ஆத்தாவும்

(மருள் சிறுகதை தொகுப்புக்கு எழுத்தாளர் காளி ப்ரஸாத் எழுதிய முன்னுரை)

நான் என்னுடைய இளம் வயதில் கண்ட திரைப்படங்களில் இந்தக் காட்சி தவறாது இடம்பெறும். தந்தை தனது மகனை வீட்டின் நடுவே நிறுத்திக் கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பார். அதற்கு மகன் ( அவரே கதாநாயகனும் கூட ) ஆவேசமாக பதில் உரைப்பார். விவாதத்தின் நிறைவில் தந்தை தனது மகனை வீட்டை விட்டு வெளியேற்ற மகனும் அவ்வாறே வெளியேறுவார். செல்லும்போது ஒருமுறை திரும்பிப் பார்க்கும் போது அவரது தாயார், அந்த தருணத்தில் அனைத்து தாயாரும் செய்வதைப் போலவே தனது முந்தானையால் வாயைப் பொத்தி நயம் பரிதாபநிலையில் அழுது கொண்டிருப்பார். பின்னர் நான் வாசிக்கத் துவங்கிய காலகட்டத்தில் இதே காட்சி இதற்கு முன்னரே இலக்கியத்தில் வந்திருப்பதை அறிய முடிந்தது. இப்பொழுது எனது கண்முன்னே இந்த சக்கரம் சுழலுவதைக் காண முடிகிறது. தந்தைமை என்பது உணர்ச்சிகரமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. ஒரு வகையில் முந்தைய தந்தை என்பவர் அது வரைக்குமான கலாசாரத்தின் பிரதிநிதி என்று வைத்துக் கொண்டால் நவீனத்துவ மகன் அவரை எதிர்த்து வெளியேறுகிறான். பின்னர் அவன் தந்தையான பிறகு தனது மகனுக்கு புறச்சூழல்களால் கட்டுண்ட அல்லது தன் மகனாலும் நவீன உலகாலும் கைவிடப்பட்ட ஒரு  தனியாளாக எஞ்சிவிடுகிறான். அந்த வித்ததில் நவீனத்துவ மகன் ஒரு பின்நவீனத்துவ தந்தையாக தனது மகனுக்கு எஞ்சுகிறான். 

எழுத்தாளர்  பிரபாகரன் அவர்களை நான் இலக்கிய கூட்டங்களில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். பிரபாகரனின் இந்தக் கதைகளை வாசித்த போது இதில் இடம்பெற்றுள்ள மூன்று தந்தையர் கதைகளும் எழுத்தில்  இவரது அழகியல் நோக்கைச் சுட்டிக் காட்டுபவையாக உள்ளன. அவற்றில் வரும் தந்தையர்கள் சுற்றத்தாலும் சமூகத்தாலும் கைவிடப் பட்டவர்களாக உள்ளனர். இளம் எழுத்தாளராக அவர் சமூகத்தைப் பார்க்கும் பார்வை என்பது கவனிக்கத் தக்கதாக உள்ளது. ஈராயிரம் குழவியினர் என்று அழைக்கப்படும் சமகால இளையோரின் பார்வை எங்கனம் பல கோணங்களில் பல தளங்களில் விரிகிறது என்பதை இந்த தொகுப்பின் வழியாக காணமுடிகிறது.  பிரபாகரனால் அலெக்ஸா போன்ற ஒன்றை உருவாக்கி அதை ஒரு தனித்த நபரின் ஆத்தாவாக பார்க்க முடிகிறது. கூர்மையான விமர்சனமும் ஏதும் ஆற்ற இயலாத  அபத்தமும் கொண்ட கதைகளாக இவரது கதைகள் விளங்குகின்றன.

இன்றைக்கு லட்சியம் குறிக்கோள் என்று ஒரு கடிவாளத்தோடு இயங்குவது சிரமம் என்று படுகிறது. கவனச் சிதறல்களும் தனிப்பட்ட கனவுகளும் பெருகியிருப்பதை சமூக வலைதளங்களின்  காட்சித் துணுக்கு வழியாக கவனிக்க இயல்கிறது. இன்றைக்கு ஒரே இளைஞர், அவரே நன்றாக படிப்பவராகவும் ( அதிலும் கலை அறிவியல் கணக்கியல் அனைத்தும்) இருசக்கர வாகனத்தில் சாகஸம் செய்பவராகவும் தற்காப்பு கலைகள் அறிந்தவராகவும் பாடவும் ஆடவும் தெரிந்தவராகவும் சமையல் புகைப்படம் போன்றவையும் அறிந்தவராகவும் என பல்துறை வித்தகராக விளங்கக் கூடிய ஆர்வம்மிக்கவராகவும் அதற்கு தகுந்தாற்போலவே கவனச் சிதறல்களுக்கும் இணையான வாய்ப்புகள் உள்ளவராகவும் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான  பிரபாகரன் இலக்கியத்தின் பாற் தனது கவனத்தை திருப்பியிருப்பதுதான்  இவரது தொகுப்பை வாசிக்கும் ஆவலை முதன்முறையாகத் தூண்டியது. வாசித்தவுடன் முதலில் ஈர்த்தது இதன் உள்ளடக்கமும் அவரது எழுத்து நேர்த்தியும்தான். அவர் போன்ற இருபது வயதினர் இலக்கியத்திற்குள் வருவதும் அமர்வுகளில் உரையாடல்களை முன்னெடுப்பதும்  அழகியல் ரீதியாக அவர் கொண்டிருக்கும் சிந்தனைப் போக்கின் விளைவு என்று கருதுகிறேன்.

அவரது விமர்சன நோக்கு வெளிப்படும் கதையாக மருள் கதையைக் கூறலாம். அதில் அவரது கதாபாத்திர அறிமுகமும் கதையில் விட்டிருக்கும் வாசக இடைவெளியும் தேர்ந்த எழுத்தாளருக்கு உரியவை.  யாதுமானவள், கடைசிநாள், இழப்பு ஆகிய கதைகளின் மாந்தர்கள் வாயிலாக  சூழ்நிலைக் கைதிகளின் சித்தி்ரத்தை  இயல்பாக கட்டமைத்து எழுப்புகிறார். அ-சரீரி கதையையும்  ‘பின்மதிய நேரத்துச் சூரியனின் காதல் நாடகம்’ கதையினையும் இந்தத்  தொகுப்பின் முத்திரைக் கதைகளாகச் சொல்லலாம்.

பொதுவாகவே, கதைகளின் சித்தரிப்புகளில் உள்ள தாவல் அல்லது அவசரம் ஆகியவை தேவையில்லை என்று கூற விரும்புகிறேன். நிறுத்தி சாவகாசமாக சொல்வதில் எழுத்தாளரின் பார்வை இன்னும் தீர்க்கமாக வெளிப்படக் கூடும்.

‘இலட்சத்தில் ஒரு காதல் கதை’ காலம்காலமாக இலக்கியத்தில் வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட கதை என்றாலும் இந்த காலத்திலும் அதில் ஒன்றும் முன்னேற்றமில்லை என்று சொல்வது போல உள்ளது. அந்த தலைப்பு அவருடைய அந்த அங்கதத்திற்கு ஒரு சான்று.

 பிரபாகரன் எழுதிய இரு கதைகளை அரூ இணைய இதழில் ஏற்கனவே வாசித்திருந்தேன். தற்போது பத்து கதைகள் சேர்ந்ந தொகுப்புடன் சிறுகதை ஆசிரியராக அவர் வெளிப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொகுப்பு அவரது எழுத்துலக பயணத்திற்கு சிறந்த துவக்கமாக விளங்குகிறது. இன்னும் பல படைப்புகளை எதிர்காலத்தில் அளிப்பார் என எதிர்பார்க்க வைக்கிறது.

-எழுத்தாளர் காளி ப்ரஸாத்

Leave a comment